ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய பி-2 குண்டுவீச்சு தாக்குதல்களை, இரண்டாம் உலகப் போரில் நடந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணு குண்டு தாக்குதல்களுடன் ஒப்பிட்டு டொனால்ட் டிரம்ப் பேசியிருக்கிறார் . இந்த அமெரிக்க தாக்குதல்தான் இஸ்ரேல்-ஈரான் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவந்தது” என்றும் அவர் அடித்து சொல்கிறார். டிரம்ப்பின் இந்த பேச்சு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் நடந்த நேட்டோ மாநாட்டின்போது டிரம்ப், “ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களை நான் உதாரணமாக காட்ட விரும்பவில்லை. ஆனால், அடிப்படையில் இதுவும் கிட்டத்தட்ட அதே போல்தான் – ஒரு போரை முடிவுக்கு கொண்டுவந்தது” என்று தெரிவித்தார். இன்னொரு பேச்சில், “இந்த பி-2 குண்டுவீச்சுதான் இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அணுசக்தி நிலையங்களை நாங்கள் அழிக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இன்னும் சண்டையிட்டு கொண்டிருப்பார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பின் இந்த கருத்துக்கள் வெளிவந்த அதே நேரத்தில், சி.என்.என் மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பல அமெரிக்க ஊடகங்கள், பி-2 குண்டுவீச்சு தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்திகளை போலிச் செய்திகள் என்று ஒரே போடாக போட்ட டிரம்ப், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் அணுசக்தி திட்டத்தை வெறும் சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தின என்று கூறிய ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார்.
பி-2 குண்டுவீச்சு தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களை முழுவதுமாக அழித்துவிட்டதாகவும், டெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை பல ஆண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறினார். ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் வைத்திருக்க முடியாது என்பதையும் அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.
ஆனால் டிரம்ப் சொல்வதை நம்ப முடியாது என்றும், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு பின் அந்த இடத்தில் ஏற்பட்ட அழிவில் ஒரு சதவீதம் கூட ஈரான் தாக்குதலில் ஏற்படவில்லை என்றும் ஈரான் தரப்பு கூறி வருகிறது. மொத்தத்தில் டிரம்ப் வழக்கம்போல் தனது பாணியில் விளம்பரத்திற்காக தன்னுடைய இஷ்டத்திற்கு பேசி வருவதாகவே உலக நாடுகள் கருதுகின்றன.