சொன்னபடி கேளு.. மக்கர் பண்ணாதே.. ரெண்டு பேரும் என் பேச்ச கேட்க மாட்டேங்குறாங்க.. போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் தாக்குதல்.. டிரம்ப் அதிருப்தி..!

  மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்த போர், டிரம்ப் முன்னெடுத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்ததாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், இன்று ஹேக்கில் நடைபெற்ற…

trump 1

 

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்த போர், டிரம்ப் முன்னெடுத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்ததாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், இன்று ஹேக்கில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டிற்கு புறப்படும் முன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தம்மால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறி, தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தனது “முழுமையான மற்றும் மொத்த போர் நிறுத்த” திட்டத்தை சீரழித்த இஸ்ரேல் மற்றும் ஈரானின் செயலை கண்டித்த அவர், “அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை” என்று ஆவேசமாக கூறினார்.

இன்றைய பேட்டியில் டிரம்ப் தனது எதிரி நாடான ஈரானை மட்டுமின்றி நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலையும் கடுமையாக சாடினார். ஏற்கனவே டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில் “அந்த குண்டுகளை வீசுவதை நிறுத்த வேண்டும்” என்று இஸ்ரேலை கேட்டு கொண்டிருந்தார். நீங்கள் மீண்டும் குண்டு வீசினால் அது ஒரு பெரிய மீறல். உங்கள் விமானிகளை உடனே நிறுத்த சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவி, நான்கு பேரைக் கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஈரான் முழுவதும் உள்ள தளங்கள் மீது அதிகாலைக்கு முன்பே வான்வழி தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதல்களுக்கு பின்னரே இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

“போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்,” என்று தனது சோஷியல் பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார். இருப்பினும், போர் நிறுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க அதிபருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமாதானத் தூதுவராக தன்னை முன்னிறுத்த ஆர்வமாக இருக்கும் டிரம்ப், வெளிப்படையாக ஆத்திரத்துடன், “இஸ்ரேல், நாங்கள் ஒப்பந்தம் செய்தவுடன், அவர்கள் வந்து நான் பார்த்திராத அளவுக்கு பெரிய குண்டுகளை வீசினர். நாங்கள் பார்த்ததிலேயே மிகப்பெரிய குண்டு தாக்குதல் இதுதான்.”

“உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு காலமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம், அவர்களால் என்ன செய்ய முடியும் என்று கூட தெரியவில்லை, புரிந்துகொள்கிறீர்களா?” என்று அவர் தொடர்ந்தார்.

“இஸ்ரேல் ஈரானை இனிமேல் தாக்காது என்று நம்புகிறேன். அனைத்து விமானங்களும் திரும்பி செல்லும், ஈரானுக்கு ஒரு நட்பு ரீதியான சிக்னலை காண்பிக்கும். யாரும் காயமடைய மாட்டார்கள்; போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது என்று அவர் பதிவிட்டார்.

முன்னதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், போர் நிறுத்தத்தின் “அப்பட்டமான மீறல்” என்று அவர் கூறிய ஈரானிய ஏவுகணைகளுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.

ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், போர் நிறுத்தம் தொடங்க வேண்டிய நேரத்திற்கு பிறகும் இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்ததாக கூறியது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கச்சி பின்னர், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்திவிடும் என்பதை உறுதிப்படுத்தினார். இஸ்ரேலும் தனது நடவடிக்கைகளின் இலக்குகளை எட்டியதாகவும், சண்டையை நிறுத்துவதாகவும் உறுதிப்படுத்தியது.

ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை குறிவைத்து டிரம்ப் உத்தரவிட்ட முன்னெப்போதும் இல்லாத குண்டுவீச்சுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதேத் விமானத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியதை தொடர்ந்து இந்த போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.

ரஷ்யா ஏற்கனவே சொன்னது போல் இரு நாடுகளும் போர் நிறுத்தம் என பெயரளவிற்கு அறிவித்தாலும் இந்த போர் நிற்காது போல் தான் தெரிகிறது.