நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. ஈரானை தாக்குவது குறித்து டிரம்ப் அளித்த பதில்..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியதுடன், ஈரான் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணையுமா என்ற கேள்விக்கு மர்மமான பதிலளித்துள்ளார். இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…

trump1

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியதுடன், ஈரான் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணையுமா என்ற கேள்விக்கு மர்மமான பதிலளித்துள்ளார். இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடுமா? என்ற கேள்விக்கு “நான் அதை செய்யலாம், செய்யாமலும் போகலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது,” என்று மர்மமான புன்னகையுடன் அவர் பதிலளித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், இஸ்ரேலிய விமானப்படை ஈரானின் முக்கிய உள்கட்டமைப்பை தாக்கியதாகவும், ஈரானின் கொடூர ஆட்சியின் அடக்குமுறைக்கு மையமான ஒரு கட்டிடமும் அதில் அடங்கும் என்றும் உறுதிப்படுத்தினார். “விமானப்படை விமானங்கள் ஈரானின் உள்நாட்டு பாதுகாப்புத் தலைமையகத்தை அதாவது ஈரானிய சர்வாதிகாரியின் அடக்குமுறைக்கான முக்கியக் கரத்தை அழித்துவிட்டன,” என்று பகிரங்கமாக கூறினார்.

இந்த நிலையில் தான் டொனால்ட் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். ஆனால், இது குறித்த மேலதிக விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. ஈரானிடமிருந்து புதிய ராஜதந்திர முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தெஹ்ரானோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவில், டொனால்ட் டிரம்ப் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியை மறைமுகமாக அச்சுறுத்தினார். அவர் இருக்கும் இடம் அமெரிக்காவிற்கு தெரியும் என்றும் கூறினார். “அவர் எளிதான இலக்குதான், ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரைகொல்லப் போவதில்லை, குறைந்தது இப்போதைக்கு இல்லை. ஆனால், பொதுமக்கள் மீதோ, அமெரிக்க வீரர்கள் மீதோ ஏவுகணைகள் பாய நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது,” என்று அவர் காட்டமாக பதிவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க இராணுவ தலையிட்டால், அதை சரிசெய்ய முடியாத பாதிப்பை அந்நாடு சந்திக்க வேண்டிய நிலை வரும்,” என்று கமேனி எச்சரித்தார். மேலும், “ஈரானை, அதன் மக்களை, அதன் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் இந்த தேசத்திடம் அச்சுறுத்தும் மொழியில் பேசுவதில்லை. ஏனென்றால், ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல!” என்றும் அவர் உறுதியுடன் கூறினார்.

நான் முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற விஜய் வசனத்தின் பாணியில் ஈரானை தாக்குவேனா? தாக்க மாட்டேனா? என்று எனக்கே தெரியாது என்ற டிரம்பின் பேட்டியில் ஆயிரம் உள்ளர்த்தங்கள் இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.