ஃபேஷன் உலகில் தற்போது கை மாடலிங் (Hand Modelling) என்ற ஒரு தனிச்சிறப்பான தொழில் முக்கிய இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்த தொழில் வழக்கமான மாடலிங்குக்கு இணையாக பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சி காரணமாக, விளம்பர பிரச்சாரங்களில் பிராண்டுகளின் கை மாடல்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டன.
ஒரு வெற்றிகரமான கை மாடலாக வர, சில விஷயங்கள் அவசியம். கைகள் நன்கு பராமரிக்கப்பட்ட சருமத்துடன், சீரான நிறத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், நகங்களும் அழகாக, நேர்த்தியாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களில் இந்த தொழிலுக்கான தேவை அதிகரிப்பதால், கை மாடலிங் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. ஆனால், இந்த வித்தியாசமான வேலையில் ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதுதான் இங்கே ஆச்சரியப்பட வைக்கும் கேள்வி.
சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் சத்ரன் என்ற நபர் ஒரு பெண்ணின் ஆடையை பாராட்டிவிட்டு, அவருடைய தொழில் என்ன என்று கேட்கிறார். தான் ஒரு கை மாடல் என்று அந்ப் பெண் சொல்லவே, சத்ரன் மிகவும் ஆச்சரியமடைந்து, மேலும் விவரம் கேட்கிறார். தனது தொழில் பயணம் பற்றி அந்த பெண் விவரிக்கையில், “என் உறவினர் ஒருவரின் கணவர் நகைத்தொழில் செய்கிறார். அவர்தான் என்னுடைய கைகளை மாடலாக பயன்படுத்த விரும்பினார். அப்படித்தான் என் கை மாடலிங் வாழ்க்கை தொடங்கியது,” என்று விளக்கினார்.
அந்தப் பெண், நகை பிராண்டுகள் மட்டுமல்லாமல், சரும பராமரிப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பானங்கள், மதுபானங்கள் என பலவற்றுக்கும் எப்படி ஒரு கை மாடலாக பணியாற்றுகிறார் என்பதை விளக்கினார். இந்தத் துறையில் அவருடைய சராசரி வருமானம் எவ்வளவு என்று சத்ரன் கேட்டபோது, ஒரு நாளைக்கு $250 முதல் $2500 டாலர் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹20,000 முதல் ₹2,000,000 வரை) சம்பாதிக்க முடியும் என்று அவர் வெளிப்படுத்தினார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!
தொடர்ந்து பேசிய அந்த பெண், கை மாடலாக தான் செய்த சில வேடிக்கையான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். கைகளால் ஒரு கேக்கை நசுக்குவதும், புறாக்கள், பூனைகள், நாய்களை பிடித்துக் கொண்டு போஸ் கொடுப்பதும் அவற்றில் அடங்கும் என்றார்.
இந்த வீடியோ உடனடியாக வைரலாகி, சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. பலர் அந்தப் பெண்ணின் நேர்மையான பதில்களை பாராட்டிய அதே வேளையில், சிலர் அவரது தொழில் பற்றி ஆச்சரியத்துடன் பேசினர். வீடியோவின் இறுதியில், தான் ஒரு இந்தியப் பெண் என்று அந்த மாடல் பெருமையுடன் கூறி, “ஒருபோதும் கைவிடாதீர்கள்” என்று அறிவுரை வழங்கினார். இந்த தனித்துவமான துறையில் ஒரு இந்திய பெண் சாதித்திருப்பது பலருக்கும் உத்வேகமளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை!
இவ்வளவு படித்த பின்னரும் கை மாடலிங் என்றால் என்னவென்று புரியாதவர்களுக்கு சில விளக்கம். கை மாடலிங் (Hand Modelling) என்பது, விளம்பரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது பிற காட்சி ஊடகங்களுக்காக, கைகளை பிரதானமாக பயன்படுத்தி போஸ் கொடுக்கும் ஒரு தொழில். இதில், முகத்திற்கு பதிலாக, கைகளின் அழகு, பராமரிப்பு, மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவை முக்கியத்துவம் பெறும்.
ஃபேஷன், அழகுசாதன பொருட்கள், நகைகள், உணவு, பானங்கள், மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற பல்வேறு துறைகளில், தயாரிப்புகளை எடுத்துக்காட்டவோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்தவோ கை மாடல்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரு அழகான, சீரான சரும நிறம் கொண்ட, நேர்த்தியான நகங்கள் பராமரிக்கப்பட்ட கைகள் இந்த தொழிலுக்கு அத்தியாவசியம்.
‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் ஒரு காயினை சுண்டிவிடும் காட்சியில் வெறும் கை மட்டும் ஒரு ஷாட்டில் இருக்கும். இந்த காட்சியை டூப் வைத்து எடுத்து கொள்ளுங்கள் என ரஜினி சொன்னபோது, ஷங்கர் ‘வேண்டாம், எனக்கு உங்கள் கைதான் வேண்டும் என அப்போதே கை மாடலிங்கை அவர் பயன்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/DHBAT60uwaI/?utm_source=ig_web_copy_link