அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிக்டாக் செயலியை வாங்குபவர் கிடைத்துவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனால், அவரது பெயரை தற்போது சொல்ல முடியாது என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலில், டிரம்ப், “டிக்டாக் செயலியை வாங்கும் நபர் ஒருவரை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறினார். ஆனால், வாங்குபவர் யார் என்பதை அவர் வெளியிடவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் விவரங்கள் கேட்டபோது, டிரம்ப் அதை வெளியிட மறுத்துவிட்டார். இரண்டு வாரங்களில் பெயர்களை வெளியிடுவேன் என்று கூறினார். “இரண்டு வாரங்கள்” என்பது அவரது அறிவிப்புகளுக்கான வழக்கமான பதிலாக இருப்பதால், இது ஒரு கேலிக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
டிக்டாக்கின் எதிர்காலம் குறித்த பல மாத கால இழுபறிக்கு பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், செயலியை விற்க வேண்டும் அல்லது அமெரிக்காவில் தடை செய்யப்பட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா 50% டிக்டாக்கின் உரிமையாளராக இருக்கும் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கும் யோசனையை டிரம்ப் முன்வைத்தார். ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் அல்லது எலான் மஸ்க் போன்ற தனது பில்லியனர் நண்பர்கள் சாத்தியமான வாங்குபவர்களாக இருக்கலாம் என்றும் அவர் கோடிட்டு காட்டினார். ஆனால், மஸ்க்கின் ஈடுபாடு இப்போது சாத்தியமில்லை என்று தெரிகிறது.
தற்போது, டிக்டாக்கை யார் வாங்குகிறார்கள் என்பது குறித்த மர்மம் தொடர்கிறது. ஆனால், டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் டிக்டாக் செயலியை வாங்குபவர் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்..
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உலகில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அது தன்னால்தான் நடந்தது என்று தனக்குத்தானே விளம்பரம் தேடிக் கொண்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன், ஈரான் – இஸ்ரேல் போரை நான்தான் நிறுத்தினேன் என்று கூறிக் கொண்டிருக்கும் அவர் டிக் டாக் செயலி விஷயத்திலும் அதே போன்ற ஒரு விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா அல்லது உண்மையிலேயே அவர் டிக் டாக் செயலியை வாங்குபவரை கண்டுபிடித்து விட்டாரா என்பதை இரண்டு வாரங்கள் கழித்து தான் தெரிந்து கொள்ள முடியும்.