நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இணைய ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், இதற்காக ₹500 கோடி மற்றும் 15 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அட்வான்ஸாக ₹50 கோடி ரூபாய் சீமான் வாங்கிவிட்டதாகவும் திருச்சி சூர்யா சிவா ஒரு பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘நாம் தமிழர்’ என்ற கட்சியை ஆரம்பித்தது முதல் சீமான் தனித்து போட்டியிட்டு வருகிறார். அவர் இதுவரை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், தனித்து போட்டி என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட, அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பல வருடங்களாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறாமல் இருப்பதால், அவரது கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் சீமானை இணைப்பதற்கான ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த திருச்சி சூர்யா சிவா கூறியுள்ளார்.
சீமானுக்கு ₹500 கோடி மற்றும் 15 தொகுதிகள் தர அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஒப்புக்கொண்டதாகவும், ₹500 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்கு பணமாக கொடுக்க பேச்சுவார்த்தை முடிவடைந்து, அதில் ₹50 கோடி ரூபாய் சீமான் அட்வான்ஸாக வாங்கிவிட்டதாகவும், வரும் தேர்தலில் அவர் பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வார் என்றும் திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
இதை சீமான் மறுப்பாரா அல்லது அமைதி காப்பாரா என்பதையெல்லாம் பொறுத்துத்தான் இதன் உண்மைத்தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.