டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் கணவரும், ரெடிட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான அலெக்சிஸ் ஓஹானியன், செயற்கை நுண்ணறிவின் உதவியோடு, தனது மறைந்த தாயுடன் ஒரு நெகிழ்ச்சியான கணத்தை மீண்டும் உருவாக்கினார். இந்த முயற்சி அவரை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியதாக கூறினார்.
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் கணவரான ஓஹானியன், தனது சமூக வலைத்தளங்களில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அடிக்கடி பகிர்ந்து கொள்வார். தனது மனைவி செரீனா மற்றும் மகள்கள் ஒலிம்பியா, அதிராவுடன் நேரம் செலவிடுவதை நாம் அடிக்கடி பார்க்க முடியும்.
இந்த நிலையில் தான் உயர்தர ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓஹானியன் தனது தாயுடனான பழைய புகைப்படத்தை ஒரு அனிமேஷன் படமாக மாற்றினார். இதில் தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டி தழுவுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. “இது இவ்வளவு உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்களிடம் கேம்கார்டர் இல்லாததால், அம்மாவுடன் நான் இருக்கும் வீடியோ எதுவும் இல்லை. பிடித்தமான எங்கள் புகைப்படங்களில் ஒன்றை ‘AI வீடியோவுக்கான தொடக்க ஃபிரேமாக’ மிட்ஜர்னியில் கொடுத்தேன், ஆச்சரியமாக இருக்கிறது… இப்படித்தான் என் அம்மா என்னை கட்டிப்பிடிப்பார். இதை 50 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்,” என்று அந்த பதிவில் அவர் எழுதியிருந்தார்.
ரெடிட் இணை நிறுவனரின் அசல் படமும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நெகிழ்ச்சியான வீடியோவும் இந்த பதிவில் இணைக்கப்பட்டிருந்தன.
ஓஹானியனுக்கு இது உணர்வுபூர்வமான ஒரு படைப்பாக இருந்தாலும், ஆன்லைனில் இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. பலர், ஏஐ உதவியுடன் போலியான நினைவுகளை உருவாக்குவது குறித்து எச்சரித்தனர். இது அவரது மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஒரு பயனர், “இதில் கவனமாக இருங்கள். மனித நினைவுகள் மிகவும் எளிதில் மாறக்கூடியவை. ஏஐ உங்களுக்கு காட்டுவதை, அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் நினைவில் கொள்வீர்கள்,” என்று எழுதினார்.
மற்றொருவர், “நான் இதை முயற்சி செய்துள்ளேன். ஆனால் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தற்போதைய நினைவுகளுடன் சரியாக பொருந்தும் ஒன்றை நீங்கள் பெறும் வரை அதை மீண்டும் மீண்டும் செய்து, மற்றவற்றை நீக்கிவிடுங்கள். இல்லையெனில், நீங்கள் தவறான நினைவுகளை உருவாக்கக்கூடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பற்றி எச்சரிக்கையாக இருங்கள், மீளமுடியாத வகையில் வரலாற்றை மீண்டும் எழுதும் சாத்தியம் உள்ளது,” என்று கருத்துத் தெரிவித்தார்.
“அவர் உங்களைக் கட்டிப்பிடித்தது அப்படியல்ல. உங்களுக்கு ஒரு தவறான நினைவு கொடுக்கப்பட்டுள்ளது,” என்று ஒரு கருத்து குறிப்பிட்டது. மற்றொருவர், “ஏஐயை பின்பற்றி, ஒரு பெரிய துயரக் குழியில் குதிக்க போகும் ஒரு கூட்டத்தை பார்ப்பது போல் உணர்கிறேன்,” என்று மேலும் கூறினார்.
அம்மா என்றால் சும்மா இல்லை, அம்மா பாசத்தை ஏஐ மூலம் உணர முடியாது. உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளத்தான் இப்படியான வீடியோ உதவும், அம்மாவின் அன்பை இதுபோன்ற செயற்கையான வீடியோவின் மூலம் உணர முடியாது’ என்று ஒருவர் தெரிவித்தார்.
சமூக ஊடகப் பயனர்களிடமிருந்து வந்த கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், ஓஹானியன் மற்றொரு ட்வீட்டில் ஒரு விளக்கத்தை பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை இழந்ததை குறிப்பிட்ட அவர், “நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மாவை இழந்தேன். ட்ரோல்கள் கவலைப்பட தேவையில்லை, நான் போதுமான அளவு துக்கம் கொண்டாடிவிட்டேன். இது ஒரு அன்பானவருக்கு மாற்று அல்ல, அப்படியிருக்கவும் கூடாது, அது எனக்கு நன்றாக புரியும்” என்று தெளிவுபடுத்தினார்.