உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான “தக்லைஃப்” திரைப்படம், கடந்த ஐந்தாம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது. முதல் நாள், முதல் காட்சி முடிந்த உடனேயே இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதன் பின்னர், யூடியூப் விமர்சகர்களும், ஊடகங்களும் “மோசமான படம்” என்று விமர்சனம் செய்ததால், முதல் வாரமே, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூட இந்த படம் மோசமான வசூலை பெற்றதாக கூறப்பட்டது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ₹200 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் வெறும் ₹40 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டிலும் பெரிய வசூல் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதால், இந்த படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாகவே இல்லை என்பதும், அதனால் சில கோடிகள் கமல்ஹாசனுக்கு நஷ்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய தோல்வி படமாக “தக் லைஃப்” அமைந்துள்ளது என்பதும், “இந்தியன் 2” படத்தை விட மோசமான வசூலை இந்த படம் செய்துள்ளது என்பதும் டிரேடிங் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. 37 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்ததால், இன்னும் ஒரு “நாயகன்” திரைப்படம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக VFX மற்றும் சில டெக்னாலஜிக்காக மிகப்பெரிய தொகையை கமல்ஹாசன் செலவு செய்தார் என்றும், அவை அனைத்தும் வீணாகின என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை ₹150 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கிய நிலையில், தற்போது இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், படத்தை திருப்பிக் கொடுக்க அல்லது தொகையை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் படத்தை திருப்பி கொடுத்தால், அது கமல்ஹாசனுக்கு மேலும் ஒரு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருமே இந்த படத்தால் நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷன் வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் மிகவும் தீவிரமாக விளம்பரம் செய்த படம் “ஜீரோ”வாகியுள்ளது. இதிலிருந்து ஒரு படத்தின் வெற்றி விளம்பரத்தில் இல்லை என்பதும், ஒரு படம் நன்றாக இருந்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதும் தெரிய வருகிறது.