தற்போதைய போட்டியான உலகில் வாழ்க்கை என்பது பெரும் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு பணியில் சேர்ந்தாலோ அல்லது ஒரு தொழிலை ஆரம்பித்தாலோ வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. பல்வேறு சோதனைகளைத் தாண்டித்தான் சாதனை செய்ய முடியும். இன்றைக்கு சாதனை செய்து உயர்ந்து இருப்பவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் சோதனைக்கு உள்ளாகி இருப்பவர்கள் தான். சிலருக்கு கடைசிவரை வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனால், விடாமுயற்சியை மட்டும் விட்டுவிடக் கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் இருக்கிறார்.
இவர் 19 ஆண்டுகளாக ஐடி துறையில் இருக்கிறார். சொந்தமாக இணையதளம் ஆரம்பித்து, அதன் மூலம் அவர் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். வெப் டெவலப்மெண்ட், மொபைல் ஆப்ஸ், வீடியோ எடிட்டிங், வெப்சைட் மெயின்டனன்ஸ், கிராபிக் டிசைன் உள்பட பல்வேறு சேவைகளை அவர் தனது வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்கிறார். 19 வருட அனுபவம், நேரடியாக வாடிக்கையாளர்களுடன் வைத்திருக்கும் தொடர்பு ஆகியவை காரணமாக இவருக்கு ஓரளவு வேலை கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை. அதனால்தான் அவர் தற்போது ஒரு பக்கம் தனது நிறுவனத்தின் சேவைகளைச் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நபராக மாறியுள்ளார்.
அவர் உணவு மட்டும் டெலிவரி செய்வதில்லை. உணவு டெலிவரியுடன் சேர்த்து, அவர் தனது ரெஸ்யூமையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். அந்த ரெஸ்யூமைப் பார்த்தவர்கள், “நீங்கள் வேலை தேடுகிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை, நான் சொந்தமாக நிறுவனம் வைத்திருக்கிறேன். அந்த நிறுவனத்தின் சேவை உங்களுக்குப் பயன்படுமானால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்,” என்று அவர் வேண்டுகோள் விடுகிறார். இப்படித்தான் நிதின் ஒருவருக்கு அவர் உணவு டெலிவரி செய்யும் போது ரெஸ்யூமை கொடுத்தபோது நிதின் ஆச்சரியமடைந்தார்.
“இவ்வளவு திறமைசாலி, 19 வருட அனுபவம் இருந்தும் அவர் இன்னும் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை என்பதை நினைக்கும் போது தனக்கு வருத்தமாக இருக்கிறது,” என்று கூறிய நிதின், தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் அவருடைய ரெஸ்யூமைப் பகிர்ந்துள்ளார். “இந்த நபருக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம். இப்படி ஒரு விடாமுயற்சி உள்ள நபரை நான் பார்த்ததே இல்லை. வேறு ஒருவராக இருந்தால், நிறுவனத்தை மூடிவிட்டு ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால், இவர் விடாமுயற்சியாக தனது நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இருப்பது மட்டுமின்றி, அதே நேரத்தில் சும்மா இருக்கும் நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் அவரது முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார். இந்த லிங்க்ட்இன் பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த பதிவால் பத்மநாபனுக்கு கூடுதலாக சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.