இப்போது என்ன சந்தேகம் வந்தாலும், ChatGPT உள்பட AI தொழில்நுட்பத்திடம் தான் மனிதர்கள் கேட்டு வருகிறார்கள் என்பதும், கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளையும் அதன் மூலமே செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நல்ல AI சாட்போட் என்பது ஆசிரியர் செய்யும் வேலையை, டாக்டர்கள் செய்யும் வேலையை, ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் வேலையை மிக எளிதாக செய்து கொடுப்பதால், அனைத்துத் துறைகளிலும் தற்போது AI நுழைந்துவிட்டது என்பதும், அதனால் முழுக்க முழுக்க உலகமே AI தொழில்நுட்பத்தால் தான் தற்போது இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிடலாம்.
ஆனால், பலர் மனநல மருத்துவரிடம் செல்வதற்கு பதிலாக, அல்லது மன அழுத்தத்துடன் இருக்கும்போது, AI மூலம் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து வருவதாக கூறப்படுவதை ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். “மனிதனைப் போல் உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு AI பதில் தராது,” என்றும், “அவை பயிற்சி பெற்ற மனநல நிபுணர்களுக்கு இணையானது அல்ல,” என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உண்மையான மனநல சிகிச்சை தேவைப்படுபவர்கள் மனிதர்கள் மூலம் தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும், தங்களுக்கு தரப்பட்ட டேட்டாக்கள், தகவல்கள் ஆகியவற்றிலிருந்து யோசித்து ஒரு முடிவை AI சொல்லும் என்றும், அது மற்ற துறைகளில் இருப்பது போல் மனநலத்துறைக்கு உதவுமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில், மனநலத்தை நோக்கமாக கொண்டே சில சிறப்பு AI சாட்போட்கள் உருவாக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். உதாரணமாக, வோபோட் (Woebot), வைசா (Wysa) போன்ற சாட் போட்டுகள் மனநலத்துறையில் கவனம் செலுத்தி வருகின்றன என்றும், இந்த சாட் போட்டுகள் பதட்டம், மனச்சோர்வு உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவற்றை குறைக்க உதவி செய்வதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.
மனநல சிகிச்சை முறைகளையும், பயனுள்ள ஆலோசனைகளையும் இந்த AI சாட்போட்கள் வழங்குகின்றன என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த ஆலோசனைகள் ஒரு குறுகிய கால நிவாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நீண்ட கால மனநல சிகிச்சை தேவைப்படுபவர்கள் கண்டிப்பாக மனிதர்களிடம் தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.