தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான நீண்ட கால உறவில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல்தான் இவ்விரு கட்சிகளும் இணைந்து சந்திக்கும் கடைசி தேர்தலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் பலமாக நம்புகின்றனர்.
தொகுதி பங்கீடு மற்றும் அதிகார பகிர்வு போன்ற விவகாரங்களில் ஏற்பட்டுள்ள மோதல்கள், தேர்தலுக்கு பிந்தைய நாட்களில் “நீ யாரோ, நான் யாரோ” என்ற நிலைக்கு இரு கட்சிகளையும் கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. நீண்ட காலமாக கூட்டணியில் இருந்தும், ஒரு ஜூனியர் பார்ட்னராகவே நடத்தப்படுவது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் உழைப்பையும் வாக்குகளையும் முழுமையாக பெற்றுக்கொண்டு, இறுதியில் அவர்களை அதிகாரத்தில் பங்கு தராமல் வெறும் “சக்கையாக” திமுக தூக்கி எறிந்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு தோள் கொடுக்கும் காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்தில் ஒரு சிறு பங்கை கேட்டபோது அதற்கு திமுக தலைமை காட்டிய பிடிவாதம் டெல்லி தலைமையையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இனிமேலும் திமுகவின் நிழலில் இருந்து தனது சொந்த கட்சி கட்டமைப்பை அழித்து கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை என்ற சமிக்ஞைகள் வெளியாக தொடங்கியுள்ளன.
இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, தற்போதைய 2026 தேர்தலிலேயே காங்கிரஸின் ஒரு பிரிவினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு மறைமுகமாக வேலை பார்ப்பதாக தெரிகிறது. ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகியோருக்கு இடையே நிலவும் நட்பு, இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்துள்ளது. திமுகவின் ஆதிக்கத்தை உடைக்க ஒரு புதிய மற்றும் வலுவான மாற்றுத் தேவை என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ், அதற்கான வாய்ப்பைத் தவெக-விடம் காண்கிறது.
2029 மக்களவை தேர்தலை இலக்காக கொண்டு, தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “காமராஜர் ஆட்சியை அமைப்போம்” என்ற முழக்கத்தோடு களமிறங்கியுள்ள விஜய்க்கு, தேசிய கட்சியான காங்கிரஸின் ஆதரவு கிடைப்பது மிகப்பெரிய பலமாக அமையும். அதேபோல், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட்டு தனித்துவமாக இயங்க விரும்பும் காங்கிரசுக்கு, விஜய்யின் புதிய அரசியல் தளம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் எதிர்கால அரசியல் வரைபடம் இந்த மெகா கூட்டணியால் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறது. பாரம்பரியமாக திமுகவுடன் பயணித்த காங்கிரஸ், இனி வரும் காலங்களில் தனது பாதையை மாற்றிக் கொள்வதன் மூலம் ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை தொடும். இந்த மாற்றமானது வெறும் தேர்தல் கணக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் ஒரு வலுவான மாற்றத்தை உருவாக்க காத்திருக்கும் புதிய கூட்டணியின் தொடக்கமாகும். 2029-ல் அமையப்போகும் தவெக – காங்கிரஸ் கூட்டணி என்பது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாக திகழும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
