திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்றும், இப்போது நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறோம், வரும் தேர்தலில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்றாலும் கொள்கையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன், “நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும்தான் எதிரானவர்கள். வன்னியர்களையும் தலித்துகளையும் பிரித்ததுதான் அந்த கட்சி. எனவே, அந்த கட்சியுடன் கூட்டணியோ, அந்தக் கட்சி இருக்கும் கூட்டணியிலோ இருக்க மாட்டோம்” என்றும் தெளிவாக தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை, அதிமுக-பாஜக கூட்டணியில் சேர தயங்குகிறது. டாக்டர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் விஜய் போன்ற புதிய கட்சியுடன் பல ஆண்டுகளாக அரசியல் நடத்தி வரும் அவர் கூட்டணிக்கு செல்லவும் தயக்கமாக இருப்பதாகவும் தெரிகிறது. எனவே, அவருக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு திமுக கூட்டணிதான். திமுகவும் தற்போது கூடுதல் அரசியல் கட்சிகளை சேர்க்க முயற்சி செய்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய திருமாவளவன், “பாட்டாளி மக்கள் கட்சி எந்த கூட்டணியில் இணைவது என்பது அவர்களது விருப்பம். அதில் நான் என்றும் தலையிட முடியாது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் கூட, அதற்கு நான் இடைஞ்சலாக இருக்க மாட்டேன். ஆனால், அதே நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிடுவோம்.
இப்போது எங்களுக்கு நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் தனித்து நின்று அதை நாங்கள் ஒரு ‘ஃபார்மாலிட்டி’ தேர்தல் ஆக எதிர்கொள்வோம். ஒரு எம்எல்ஏ கூட இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. அதற்காக நாங்கள் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம்” என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.