தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் கடந்த தேர்தலை போல் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட சம்மதிக்க மாட்டோம் என்றும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்றும் மறைமுகமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த கோரிக்கைகளுக்கு பயப்படப் போவதில்லை என்பது போல் தி.மு.க.வின் செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தி.மு.க.வின் அரசியல் காய் நகர்த்தல் இதனை உணர்த்துதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமாவளவனின் நிலைப்பாடு: தி.மு.க.வின் கணிப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்னதான் அரசுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் மறைமுகமாக பேசினாலும், அவர் கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார் என தி.மு.க. தலைமை உறுதியாக நம்புகிறது. ஒருவேளை அவர் வெளியேறினாலும் அவருக்கு அடுத்த மாற்று இல்லை. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு அவர் செல்ல முடியாது. நடிகர் விஜய்யின் அரசியல் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இப்போது யூகிக்க முடியாது. ஒருவேளை ‘மக்கள் நலக் கூட்டணி’ போல் விஜய்யின் கூட்டணி ஆகிவிட்டால், தன்னுடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பது திருமாவளவனுக்கு நன்றாகத் தெரியும். எனவே, கூட்டணியில் இருந்துகொண்டே அதிக தொகுதிகளை வாங்க முயற்சிப்பாரே தவிர, அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டார் என தி.மு.க. தலைமை உறுதியாக நம்புகிறது.
ம.தி.மு.க.வும் தி.மு.க.வின் மாற்று திட்டங்களும்:
ம.தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கட்சிக்கு மிகவும் குறைந்த வாக்கு சதவீதம் தான் இருக்கிறது. அதே நேரத்தில், ம.தி.மு.க.வின் நடவடிக்கையும் துரை வைகோவின் பேச்சும், தி.மு.க.வினருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, துரை வைகோ கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டதை தி.மு.க. ரசிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவ்வப்போது தி.மு.க.வை விமர்சனம் செய்து வந்ததும் தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ம.தி.மு.க. வெளியேறட்டும் என்றுதான் தி.மு.க. விரும்புகிறது. அதற்கு பதிலாக, தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், பா.ம.க. உடைந்து அன்புமணியின் அணி மற்றும் ராமதாஸின் அணி என இரண்டாக பிரிந்தால், அதில் ராமதாஸ் அணியை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
கூடுதல் தொகுதிகள் கேட்டு கூட்டணி கட்சிகள் மிரட்டினால், “நீங்கள் வெளியேறினாலும் பரவாயில்லை, எங்களுக்கு வேறு மாற்று திட்டங்கள் உள்ளன” என்பதை உணர்த்துவதற்காகத்தான் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வை மிரட்டுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க.வின் வெற்றி நம்பிக்கை:
மொத்தத்தில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளின் பலம், தனக்கு இருக்கும் நிரந்தரமான வாக்கு வங்கி, மற்றும் கடைசி நேரத்தில் செலவு செய்யப்படும் பணம் ஆகியவை காரணமாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று முழு நம்பிக்கையோடு இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கும் அளவுக்கு அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியிடம் செல்வாக்கு இல்லை. நடிகர் விஜய் ஏதாவது செய்து தி.மு.க.வின் வெற்றியை தடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.