ChatGPTயால் மூளைக்கு வேலையே இல்லை.. காப்பி பேஸ்ட் மனிதர்களாகி வரும் எதிர்கால சந்ததி.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

  ChatGPT போன்ற ஏஐ கருவிகள், மனிதர்களின் அறிவாற்றல் திறன் மற்றும் சிந்திக்கும் திறனை முழுமையாக குறைத்து வருகிறது என்றும் இது பெரும் ஆபத்தில் முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு…

chatgpt

 

ChatGPT போன்ற ஏஐ கருவிகள், மனிதர்களின் அறிவாற்றல் திறன் மற்றும் சிந்திக்கும் திறனை முழுமையாக குறைத்து வருகிறது என்றும் இது பெரும் ஆபத்தில் முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெருமளவில் பயன்படுத்துவதற்கு முன்பு, மனிதனுக்கு ஆழமான சிந்திக்கும் திறன் ஏற்பட்டது. ஆனால் தற்போது சிந்திக்கும் திறன் வெகுவாக குறைந்துவிட்டது என சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில், 18 முதல் 39 வயது வரையிலான நபர்களை கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிற்கும் SAT (Scholastic Assessment Test) பாணி கட்டுரைகளை எழுத சொல்லப்பட்டது. முதல் குழு ChatGPT ஐப் பயன்படுத்தியது, இரண்டாவது குழு கூகுள் தேடலை பயன்படுத்தியது, மூன்றாவது குழு எந்த கருவியையும் பயன்படுத்தாமல் தாங்களாகவே எழுதியது. அவர்கள் அனைவரும் எழுதும்போது, அவர்களின் மூளைச் செயல்பாடு EEG (Electroencephalogram) கருவி மூலம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள், ChatGPT பயன்படுத்தியவர்கள் மற்றவர்களை விட தொடர்ந்து மிக குறைந்த செயல்திறனையே வெளிப்படுத்தினர் என்பதை காட்டின. அதாவது, அவர்களின் மூளை செயல்பாடு, மொழிப் பயன்பாடு மற்றும் எழுதும் முயற்சி ஆகியவை மிக குறைந்த அளவிலேயே இருந்தன. காலம் செல்லச் செல்ல, இவர்களில் பலர் மேலும் செயலற்றவர்களாக மாறி, பெரும்பாலும் தகவல்களை ‘காப்பி-பேஸ்ட்’ செய்வதையே நம்பியிருக்க நிலை ஏற்படும் என தெரியவந்தது.

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான நதாலியா காஸ்மினா, இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டு செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான எச்சரிக்கையை பதிவு செய்தார். ChatGPT மூலம் எழுதப்பட்ட கட்டுரைகளில் அசல் தன்மை இல்லை என்றும், ஆசிரியர்கள் அவற்றை “உயிரற்றவை” என்று குறிப்பிட்டதையும் அவரது குழு கண்டறிந்தது. இதன் முடிவுகள், படைப்பாற்றல், நினைவாற்றல் மற்றும் மொழி சார்ந்த புரிதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளில் குறைந்த செயல்பாட்டை காட்டின. இதற்கு நேர்மாறாக, செயற்கை நுண்ணறிவு இல்லாமல் எழுதிய பங்கேற்பாளர்கள் மிக உயர்ந்த மூளை இணைப்பு மற்றும் ஈடுபாட்டை காட்டினர். அதேபோல், கூகுள் தேடலை பயன்படுத்தியவர்களும் சிறப்பாக செயல்பட்டதுடன், அதிக திருப்தியையும் தெரிவித்தனர்.

ChatGPT பயன்படுத்தியவர்களிடம் ஏ.ஐ.யின் உதவியின்றி கட்டுரைகளை எழுத சொன்னபோது, தாங்கள் எழுதியவற்றில் மிக குறைவாகவே அவர்களுக்கு நினைவில் இருந்தது. மேலும், அவர்களின் மூளை அலைகளில் பலவீனமான செயல்பாடு தெரிந்தது. அவர்கள் ஏ.ஐ.யை முழுமையாக சார்ந்திருப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டியது. இருப்பினும், ஆரம்பத்தில் ஏ.ஐ. இல்லாமல் எழுதி, பின்னர் அதை துணையாக பயன்படுத்தியவர்கள் குறிப்பிடத்தக்க மூளை மேம்பாடுகளை காட்டினர். இது, அடிப்படை சிந்தனைக்குப் பிறகு ஏ.ஐ.யை பயன்படுத்தினால், அது கற்றலுக்கு தடையாக இல்லாமல் ஆதரவாக இருக்கலாம் என்பதை குறிக்கிறது.

இங்கு ஒரு துரதிஷ்டம் என்னவென்றால், பல இணைய பயனர்கள், இந்த ஆய்வு அறிக்கையைகூட செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தியே சுருக்கமாக வெளியிட்டனர். இது முக்கிய குறிப்புகளை மறைத்து முழுமையான அறிக்கை பலருக்கு செல்வதை தடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏ.ஐ. முழுமையாக பரவுவதற்கு முன்னர், அதிக எச்சரிக்கையுடனும், சரியான சட்டதிட்டங்களுடனும், ஆழமான மதிப்பீடுகளுடனும் செயல்பட வேண்டும் என்று இந்த ஆய்வு வலுவாக வலியுறுத்துகிறது.