யூடியூபர் ஜோதியுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது.. எல்லோரும் பாகிஸ்தான் உளவாளிகளா?

  இந்திய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், நாடு முழுவதும் இருந்து 10 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த…

spy

 

இந்திய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், நாடு முழுவதும் இருந்து 10 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பிற்காக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

இது வரை கைது செய்யப்பட்ட பாக் உளவாளர்கள் பற்றிய முழு விவரம்:

1. ஜ்யோதி மாலஹோத்ரா – ஹிசார், ஹரியானா

பிரபல ட்ராவல் யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ஜ்யோதி மாலஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தூதரக அதிகாரியான டானிஷுடன் நெருக்கமாக இருந்ததாகவும், டானிஷின் உதவியுடன் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதிலிருந்து, அவர் யூடியூப் சேனல் உளவுத் தொடர்புகளுக்கான மறைமுக கவசமாக இருந்ததா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் சீனாவுக்கும் பயணம் செய்திருக்கிறார் என்ற தகவலும் போலீசாரிடம் உள்ளது.

2. ஷாஹ்ஸாத் – மொரடாபாத், உத்தரப் பிரதேசம்

ISI ஏஜென்டாக செயல்பட்டதாக கூறப்படும் ஷாஹ்ஸாத், ராம்பூர் மாவட்டத்தின் டாண்டா பகுதியைச் சேர்ந்தவர். பல வருடங்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பொருட்களை கடத்தும் நபராக இருந்து, உளவுத்துறை தொடர்புகளை வளர்த்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்குச் செல்ல பலரை வழிகளை ஏற்படுத்தி இந்திய SIM கார்டுகளை பாகிஸ்தான் ISI அதிகாரிகளிடம் கொடுத்ததாகவும், இதற்காக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

3. ராகீப் கான் – ரூர்க்கி, உத்தரகாண்ட்

பதிந்தா கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கடையில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த ராகீப் கான், உளவுத்துறை தொடர்பில் இருப்பதாக பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4. குஸாலா – மலேர்கோட்லா, பஞ்சாப்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உதவியதாக கூறப்படும் குஸாலா என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

5. யமீன் மொஹம்மத் – மலேர்கோட்லா, பஞ்சாப்

குஸாலாவின் நெருங்கிய உதவியாளராக இருந்த யமீன் மொஹம்மத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உதவியதாக கூறப்படுகிறது.

6. ஹர்கீரத் சிங் – ஹிசார், ஹரியானா

ஹரியானா சிக்கு குருத்வாரா நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த ஹர்கீரத் சிங், பாகிஸ்தான் விசா பெற உதவியதாகவும், உளவுத் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் ஒரு ஊடக நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த ஊடகம் உளவு தூண்டுதல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

7. அர்மான் – நுஹ், ஹரியானா

நுஹ் மாவட்டத்தில் உள்ள ராஜாகா கிராமத்தை சேர்ந்த அர்மான், இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வாட்ஸ்அப்பில் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மொபைலில் இருந்து பாகிஸ்தான் எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Defense Expo 2025 நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் அவர் அனுப்பியிருக்கிறார் என கூறப்படுகிறது.

அவர் 2024-ல் இருமுறை பாகிஸ்தான் சென்றதாகவும், டெல்லியில் பாகிஸ்தான் அதிகாரி டானிஷை சந்தித்ததையும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது மோசடி, கார் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

8. பலக் ஷேர் மசீஹ் மற்றும் சுராஜ் மசீஹ் – அமிர்தசர், பஞ்சாப்

மே 3, அன்று, அமிர்தசர் ரூரல் போலீசால் கைது செய்யப்பட்ட இவர்கள், இராணுவ ரகசியங்கள் மற்றும் விமானப்படை தளங்கள் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

9. தேவீந்தர் சிங் தில்லான் – கைதல், ஹரியானா

தேவீந்தர் சிங் தில்லான், பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் வழங்கியதாக கைதல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

10. நௌமான் இலாஹி – கைரானா, உத்தரப் பிரதேசம்

இந்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசிற்கு வழங்கியதாக நௌமான் இலாஹி கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் தற்போது தீவிர விசாரணையில் உள்ளார்.