புனே நகரத்தில் பெண்களை கவர்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஒரு நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய கவுரவ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், காரடி பகுதியிலுள்ள திதே வாஸ்தி, லேன் நம்பர் 2-ல் உள்ள விநாயக் அபார்ட்மென்ட்ஸில் பிடிபட்டார்.
காவல் நடவடிக்கையின் போது, அதிகாரிகள் இந்திய விமானப்படையைச் சேர்ந்தது போல தோன்றும் பல பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதில் யூனிபார்ம், டி-ஷர்ட், காம்பாட் பேன்ட், ஷூஸ், பேட்ஜ்கள் மற்றும் ட்ராக்ஸூட் ஆகியவை அடங்கும்.
கவுரவ் குமார் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அலிகர் நகரத்தில் பிறந்தவர். இவர் காரடி பகுதியில் உள்ள ஸ்டேபர்ட் ஹோட்டலில் ரிசெப்ஷனிஸ்டாக வேலை செய்துவருகிறார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, இவர் விமானப்படை அதிகாரியின் உடையை அணிந்து, பல பெண்களிடம் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றியுள்ளார்.
இந்த வழக்கு, ஹெட்கான்ஸ்டபிள் ராம்தாஸ் பால்வே அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காரடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள், கடந்த சில நாட்களாக கவுரவ் குமார் மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அனைத்து விவரங்களையும் உறுதி செய்த பிறகே கைது செய்தனர். மேலும், இவர் போலியான அதிகாரி என சாகசம் செய்து சில பெண்களைவும் வலை வீசியதாக கூறப்படுகிறது.
இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 168-ன் கீழ் கவுரவ் குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரது நோக்கம் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற விவரங்களை அறிவதற்காக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.