தங்கை திருமணத்திற்காக வைத்திருந்த 12 லட்சம் போச்சு.. உயிரை மாய்த்து கொண்ட சாப்ட்வேர் எஞ்சினியர்..!

By Bala Siva

Published:

தங்கை திருமணத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த 12 லட்ச ரூபாயை ஆன்லைனில் இழந்த 30 வயது இளைஞர் ஒருவர் உயிரை மாத்துக்கொண்ட துரதிஷ்டமான சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் அரவிந்த் என்பவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக கஷ்டப்பட்டு 12 லட்சம் சேர்த்து வைத்திருந்தார். பொம்மரெட்டிகுடம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் கஷ்டப்பட்டு படித்து ஒரு நல்ல வேலையை பெற்று தற்போது தான் தனது குடும்பத்தை முன்னேற்றி உள்ளார்.

இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் தான் வேலை பார்க்கும் நிறுவனம் அருகிலேயே வசித்து வருகிறார். தனது தங்கையின் திருமணத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த அவர் 12 லட்சம் சேர்த்து விட்டதாகவும் மே 5ஆம் தேதி அவரது தங்கைக்கு திருமணம் செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டெலிகிராம் மெசஞ்சரில் இருந்து அவருக்கு ஒரு இணைப்பு வந்ததை அடுத்து அந்த இணைப்பை க்ளிக் செய்து பார்த்தபோது வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் சில பணிகளை செய்யலாம் என்றும் இதன் மூலம் அதிக பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிறுவனத்தில் வேலை செய்த நேரம் போக மீதி இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து பணி செய்யலாம் என்று முடிவு செய்து அவர் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதனை அடுத்து அவர் தனது வங்கியில் சேர்த்து வைத்திருந்த 12 லட்ச ரூபாய் திடீரென மோசடி செய்யப்பட்டதாக அவருக்கு தெரியவந்தது. ஆன்லைன் மோசடி செய்தவர்களிடம் இருந்து அந்த பணத்தை எப்படி மீட்பது என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை.

இதனால் அவர் உருக்கமான கடிதத்தை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். மே ஐந்தாம் தேதி தனது சகோதரி திருமணத்தை நடத்துவதற்காக சேர்த்து வைத்த பணம் முழுவதுமே ஆன்லைன் மோசடியால் இழந்து விட்டதால் தனது தங்கையின் திருமணம் நின்றுவிடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

இது குறித்து காவல்துறையினர் அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...