ஆந்திராவையும் விட்டு வைக்காத அம்மா உணவகம் திட்டம்.. அண்ணா கேண்டீன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

By John A

Published:

இந்தியாவில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்பதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஆந்திராவில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராசர், எம்.ஜி.ஆர்., மு.க.ஸ்டாலின் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்றவை உலகின் பல நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கின. மேலும் இத்திட்டத்தினை நாட்டில் உள்ள பல மாநிலங்களும் செயல்படுத்தி வருகின்றன.

இதேபோல் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் மக்கள் நலனுக்காக பல்வேறு சீரிய திட்டங்களைச் செயல்படுத்தி வரலாற்றில் இடம்பிடித்தனர். அந்த வகையில் புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம்.

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சிகளில் மலிவு விலையில் தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சுவையான உணவு வழங்கப்படுகிறது. தினமும் ரூ. 10 இருந்தால் போது ஒருநாள் உணவினை திருப்தியாகச் சாப்பிடலாம். இந்த அம்மா உணவகங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பலருக்கும், வேலை தேடி வெளியூர் சென்று பிழைப்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ளது.

கடந்த மாதம் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவினை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் அம்மா உணவகம் சிறப்பாக இயங்கத் தேவையான கூடுதல் உபகரணங்கள் வாங்கிடவும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டது.

இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!

மிகச் சிறப்பாக இயங்கி வரும் இந்தத் திட்டத்தினை தற்போது அப்படியே ஆந்திர அரசும் செயல்படுத்தி வருகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தற்போது தலைநகராக அமராவதியை கட்டமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அம்மா உணவகத்தினைப் போலவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் பெயரில் ‘அண்ணா கேண்டீன்’ என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தினைப் போலவே தினமும் காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் ரூ. 5-க்கு தரமான உணவு அளிக்கப்படுகிறது. தமிழகத்தினைப் போலவே ஆந்திராவிலும் இத்திட்டம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் செயல்படுத்தி வரும் இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற நடைமுறை ஆந்திராவிலும் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.