தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுடன் மட்டும்தான் கடந்த 50 ஆண்டுகளாக கூட்டணி வைத்துள்ள நிலையில், முதல் முறையாக சின்னச் சின்ன அரசியல் கட்சிகள் இரண்டு திராவிட கட்சிகளையும் புறக்கணித்துவிட்டு விஜய் பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஃபார்வர்டு பிளாக், ஐக்கிய ஜனதா தளம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், இந்தக் கட்சிகள் 2026 ஆம் ஆண்டில் அப்படியே இருக்குமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இடது மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. ஆகியவை 12 தொகுதிகள் வரை கேட்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க வாய்ப்பே இல்லை என தி.மு.க. மறுத்து வருகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 30 முதல் 40 தொகுதிகள் வரை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 20 முதல் 30 தொகுதிகள் கேட்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் தற்போது கூட்டணி கட்சிகள் மத்தியில் ஓங்கி ஒலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இன்று வரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை கூட இல்லை என்பது அந்தக் கூட்டணியின் பின்னடைவாகவும், பலவீனமாகவும் உள்ளது.
இந்த நிலையில்தான், திடீரென விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து, தமிழக அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், ஆட்சியில் பங்கு என்பதை அவர் முதல் பொதுக்கூட்டத்திலேயே அறிவித்துள்ளார். எனவே, ஏற்கனவே விஜய்க்கு 10 முதல் 20% வாக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் விஜயை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பி உள்ளன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் விஜய் பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த மூன்று தேர்தலாக தி.மு.க. எப்படி ஒரு பலமான அணியாக இருந்ததோ, அதேபோல் விஜய் கூட்டணியும் பலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், முதல் முறையாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை மற்ற அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.