தமிழகத்தை பொருத்தவரை, கூட்டணி கட்சிகளின்றி அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ வெற்றி பெறவும் முடியாது, ஆட்சி அமைக்கவும் முடியாது என்ற நிலை பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. சின்ன சின்ன கட்சிகளாக தோன்றி, தற்போது கிட்டத்தட்ட ஐந்து முதல் பத்து சதவீத வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகள், இதுவரை கொடுத்த தொகுதிகளை வாங்கிக்கொண்டிருந்த நிலையில், தற்போது கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என உத்தரவு போடும் நிலைக்கு வந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் தான்.
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மட்டுமே களத்தில் இரு துருவங்களாக இருந்த நிலையில், அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கும் சென்று கொண்டிருந்தன. ஆனால், தற்போது புதிதாக, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் விஜய்க்கு வாக்களிக்க உள்ளனர். இளைய தலைமுறை வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்குகள், ரசிகர்களின் வாக்குகள் என கிட்டத்தட்ட அவருக்கு 10 முதல் 15 சதவீதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தி.மு.க. தொண்டர்களின் அதிருப்தி வாக்குகள், அ.தி.மு.க. தொண்டர்களின் அதிருப்தி வாக்குகள் கூட விஜய்க்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, கூட்டணி கட்சிகளை தன் வசப்படுத்தி, கூட்டணி ஆட்சி என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு இரு திராவிட கட்சிகளும் வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கூட்டணி ஆட்சி என்பதை பா.ஜ.க. கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், தி.மு.க. கூட்டணியிலும் கூட்டணி ஆட்சி என்ற குரல் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்கிவிட்டாலே தானாகவே கூட்டணி ஆட்சி ஏற்படும் என்பதும் கூட்டணி கட்சிகளின் கணக்காக உள்ளது.
இதுவரை ஆறு தொகுதிகளை மட்டுமே பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள், இடது மற்றும் வலது கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தற்போது 12 தொகுதிகள் வரை கேட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 15 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி குறைந்தது 30 முதல் 40 தொகுதிகள் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் தலா நான்கு தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. தேமுதிக இந்த கூட்டணிக்கு வந்தால் குறைந்தது ஆறு தொகுதிகள் கேட்கும்.
அதுமட்டுமின்றி, மேற்கண்ட கட்சிகள் அனைத்துமே தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்றும் கூறி வருவதும் தி.மு.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம் வைத்து பார்த்தால், தி.மு.க. 100 முதல் 110 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், இவ்வாறு ஒரு நிலை வந்துவிட்டால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது, கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றும் தெரிகிறது.
தி.மு.க.வும் தற்போது தனது மனநிலையை மாற்றிக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. “நம் கையில் ஆட்சி தொடர வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சி என்றாலும் பரவாயில்லை, ஒரு சில டம்மி அமைச்சர் பதவிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு முக்கியமான அமைச்சர் பதவிகளை நாமே வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து ஆட்சியை நடத்துவதுதான் அனைவருக்கும் பாதுகாப்பு” என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, தி.மு.க.வும் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்து, கூட்டணி கட்சிகளை அரவணைத்து, கட்சிகள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில், தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணிக்கும் செல்லலாம் என்ற நிலை இருப்பதால், போகப்போகத்தான் கூட்டணி கட்சிகளின் நிலவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.