பங்கஜ் என்ற ஸ்விக்கி உணவி டெலிவரி பணி செய்துவரும் ஒருவர், ஒரே குழந்தையின் தந்தையாக தொழிலும் பொறுப்பானவராக என இரட்டை பொறுப்புகளை சுமந்து வருகிறார்.
கடந்த வாரம், அவரைப் பற்றி குருகிராமைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி மயங்க் அகர்வால் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவு, இணையத்தில் வைரலானதும், பங்கஜ் சமூக ஊடகங்களில் புகழும் பரிதாபமும் பெற்றார்.
அந்த பதிவில், பங்கஜ் ஒரு உணவுப் பொருளை டெலிவரி செய்ய வந்தபோது, தனது இரண்டு வயது மகள் ‘துன்துன்’ உடன் இருந்தது பற்றி அகர்வால் கூறியிருந்தார். முதலில், அவர் உணவை இரண்டாம் மாடிக்கு கொண்டு வர சொன்னார். ஆனால், பங்கஜுடன் உறுதி செய்வதற்கான அழைப்பின் போது ஒரு குழந்தையின் குரல் கேட்டதும், அவருக்கு ஆச்சரியமும் கவலையும் வந்தது. உடனே அவர் கீழே ஓடி வந்தார். அப்போது பங்கஜ் தனது மகளுடன் கீழே நின்றது அவரை நெகிழ வைத்தது.
இந்தக் காட்சிக்கு பின்னணியில் உள்ள காரணம் மனதை உலுக்கும் வகையில் இருந்தது. அகர்வால் பதிவில் கூறியதன்படி, பங்கஜின் மனைவி, குழந்தை பிறக்கும் போது உயிரிழந்துவிட்டார். அவருடைய மகன் மாலை நேர வகுப்புகளுக்கு செல்வதால், பங்கஜ் உணவுப் பொருள் விநியோகிக்கும்போது, தன் பெண் குழந்தையை தனியாக விட முடியாமல் உடனே அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.
“தன் மகளை கவனித்துக்கொண்டு, டெலிவரி வேலை செய்வதில் எந்தத் தவறும் கூறவில்லை,” என அகர்வால் பதிவு செய்தார். சில வாடிக்கையாளர்கள் எதற்காக குழந்தையுடன் உணவு டெலிவரி செய்ய வருகிறாய், வீட்டிலேயே இரு’ என்று கூறுகிறார்கள். ஆனால் பங்கஜ் எதையும் புகார் செய்யவில்லை அவரது அமைதியான சிரிப்பே பதிலாக இருந்தது.”
இந்த பதிவு விரைவில் X, இன்ஸ்டாகிராம் போன்ற பிளாட்ஃபாரங்களுக்கும் பரவியது. பலரும் பங்கஜின் மனத்துணிவை பாராட்டி, அவருக்கு உதவ முனைந்தனர். பலரும் அவரது UPI எண் மற்றும் தொடர்பு எண்ணைக் கேட்டனர். பலர் பணம் அனுப்பவும் செய்தனர்.
இதையடுத்து, மயங்க் அகர்வால், லிங்க்ட்இன் பதிவில் புதுப்பிப்பு செய்து பங்கஜின் UPI விவரங்களை நீக்கினார்.
உதவி குறித்து பங்கஜ் நெகிழ்ச்சியுடன் கூறியபோது, ‘எனக்கு உதவிதான் வேண்டும் என்று இல்லை. எனக்கு என் மகளை பார்த்துக்கொள்ளும் தகுதியும் திறனும் உள்ளது. உதவியை உண்மையில் தேவைபடுவோருக்கு அனுப்புங்கள்’ என சொன்னார். மேலும் அவர் ‘எனது வீட்டில் லஷ்மி இருக்கிறாள், அவள் தான் என் மகள் என்றும் மகிழ்ச்சியாக கூறியது பலரையும் ஆழமாக நெகிழ செய்தது.