தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் எழுச்சி தற்போது ஏற்பட்டிருப்பதாகவும், எங்கு பார்த்தாலும் விஜய் அலைதான் வீசுவதாகவும், நகரம் முதல் கிராமம் வரை யாரை பார்த்தாலும் விஜய்க்குத்தான் வாக்களிப்போம் என்று கூறி வருவதாகவும் அரசியல் ஆய்வாளர் ஸ்ரீராம் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. தனது கூட்டணிக்கு நடிகர் விஜய்யை அழைத்து வர முயற்சித்து வருவதாகவும், ஆனால் விஜய் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் ஸ்ரீராம் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை ‘மாற்றம் வேண்டும்’ என்று நினைக்கும் வாக்காளர்கள் சுமார் 40% பேர் இருக்கிறார்கள் என்றும், அந்த வாக்குகளை முழுவதுமாக பெற வேண்டுமென்றால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் இணைய கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
மேலும், விஜய்க்கு வாக்களிப்பவர்கள் எல்லோருமே அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்களித்து சலித்து போனவர்கள் என்றும், அதுமட்டுமின்றி விஜய்யை முதல்வர் வேட்பாளராகவே அவருடைய கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பார்க்கிறார்கள் என்றும் ஸ்ரீராம் குறிப்பிட்டார். எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வர் பதவியோ அல்லது அமைச்சர் பதவியோ பெற அவர் ரிஸ்க் எடுக்க மாட்டார் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
18 முதல் 40 வயது உடையவர்கள் மிக அதிகமாக விஜய்க்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும், கல்லூரி மாணவ மாணவிகள் கூட தங்கள் பெற்றோர்களை விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், இப்படி ஒரு எழுச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் வியப்புடன் தெரிவித்தார்.
விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு அதிகபட்சமாக 9% வாக்குகள் கிடைக்கும் என்றுதான் நான் கூட சில கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டேன். ஆனால், மே மற்றும் ஜூன் மாதத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர் இன்னும் களத்தில் இறங்கவில்லை, வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். ஆனால், அவருக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக 20% வாக்குகள் இருப்பதாகவும், ஒரு சில பகுதிகளில், அதாவது கடலோரப் பகுதிகளில் 30 சதவீதம் வாக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.”
விஜய் கண்டிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும், அப்படியே அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார் என்றும் ஸ்ரீராம் கூறினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வது சந்தேகம் என்பதால், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க.வின் வாக்குகள் நாளுக்கு நாள் சரிந்து வருவதாகவும், தி.மு.க.வின் வாக்குகளை விஜய் தான் கபளீகரம் செய்கிறார் என்றும் கூறிய அவர், இளைஞர்களின் வாக்குகளும் பெரும் அளவு விஜய்க்கு செல்வதால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளும் சரிவதாகவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி மட்டும் தவெகவுடன் தான் கூட்டணி என்ற ஒரே ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டால் தி.மு.க. குளோஸ் என்றும், 2026 தேர்தலில் ராகுல் காந்தி எடுக்கும் முடிவே முக்கியமாக இருக்கும் என்றும், காங்கிரஸ் மட்டும் தவெகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், மற்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கும், விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது என்று ஸ்ரீராம் சுட்டிக்காட்டினார்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது நல்ல எழுச்சி இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பலம் வாய்ந்த தலைவர்கள் முன் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் ஸ்ரீராம் குறிப்பிட்டார். ஆனால், இப்போது இரு திராவிட கட்சிகளிலும் உள்ள தலைவர்களை மிக எளிதில் விஜய் வீழ்த்திவிடுவார் என்றும் அவர் கூறியிருப்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.