கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யும், திருமாவளவன்னும் டெல்லி சென்றதாகவும், அங்கே காங்கிரஸ் தலைவர்களை விஜய்க்கு திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதன் பின்னர் புதிய கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், வலதுசாரி ஆதரவாளர் எம். குமார் சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு ஆண்டாகவே மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டணியிலிருந்து வெளியேறும் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். தங்களுக்கு கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என்றும், கூட்டணி ஆட்சி குறித்து எந்தவிதமான சாதகமான பதிலும் இல்லை என்றும், அதுமட்டுமின்றி மிகவும் குறைவான தொகுதிகளே தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் திருமாவளவன் தனது பேட்டிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சூழலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அந்த கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ஒரு புதிய கூட்டணி அமைக்க திருமாவளவன் திட்டமிட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அந்த அடிப்படையில்தான் விஜய்யை அழைத்துக்கொண்டு திருமாவளவன் டெல்லி சென்றதாகவும், அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து புதிய கூட்டணி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ததாகவும் எம். குமார் அந்த விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போது அதே விவாதத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் இந்தத் தகவலை மறுத்தனர். இருப்பினும், எம். குமார் இந்தத் தகவலை தான் சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டதாகவும், அதை யாரும் மறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த விஜயதாரிணி, ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததாகவும், அப்போது ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரில்தான் புதிய கட்சியை அவர் தொடங்கியதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.