நேரம் தான் நல்லா இருக்கு.. இனிமேல் GPS நேர கணக்கீடு கிடையாது.. இந்தியாவுக்கு என சொந்தமான நேர திட்டம்.. மத்திய அரசு அதிரடி..!

இந்தியா இனிமேல் GPS நேர கணக்கீட்டை இனி பயன்படுத்த போவதில்லை என்றும் அதற்கு பதிலாக, ஐந்து அணு கடிகாரங்கள் கொண்ட முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து,…

time

இந்தியா இனிமேல் GPS நேர கணக்கீட்டை இனி பயன்படுத்த போவதில்லை என்றும் அதற்கு பதிலாக, ஐந்து அணு கடிகாரங்கள் கொண்ட முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, வங்கி சேவைகள் போன்ற முக்கிய துறைகளை வெளிநாட்டு சவால்களில் இருந்து பாதுகாக்கவே இந்த முடிவு என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமீபத்தில் அறிவித்தார்.

இது, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறுவதற்கான உறுதியையும், வெளிநாட்டு அமைப்புகளின் மீதான சார்புநிலையை குறைப்பதற்கான உலகளாவிய போக்கையும் காட்டுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போது நாம் அமெரிக்காவின் ஜிபிஎஸ்-ஐ நம்பி இருக்கிறோம். இது 10 நானோ விநாடிகள் வரை துல்லியமாக இருந்தாலும், போர் போன்ற அவசர காலங்களில் வெளிநாட்டு தலையீடு அல்லது தரவு மறுப்புக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. கார்கில் போரின்போது, அமெரிக்கா ஜிபிஎஸ் தகவல்களை இந்தியாவுடன் பகிர மறுத்ததை தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி ஆஷிஷ் அகர்வால் நினைவு கூர்ந்தார். அந்த அனுபவமே, உள்நாட்டு நேர கணக்கீட்டு முறையை உருவாக்க நம்மை நோக்கி தள்ளியுள்ளது.

நமது புதிய உள்நாட்டு நேக் கணக்கீட்டு அமைப்பு, கவுஹாத்தி, பெங்களூரு, அகமதாபாத், ஃபரிதாபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய ஐந்து நகரங்களில் நிறுவப்படும் அணு கடிகாரங்களால் கட்டுப்படுத்தப்படும். இந்த மிகவும் துல்லியமான கடிகாரங்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு, விரைவில் முழுமையாக செயல்பட தயாராக உள்ளன. இந்த மாற்றம் நடந்தாலும், IST வழக்கம்போல் UTC-யிலிருந்து 5:30 மணிநேரம் முன்னோக்கி இருக்கும்.

பங்குச் சந்தை, வங்கி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இனிமேல் இந்த கடிகாரம் தான் பயன்படுத்தப்படும் என்றும் புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தவுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ நேர கணக்கீட்டிற்கு இதைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை போலவே, சொந்த நேர அமைப்பை உருவாக்கும் வரிசையில் இந்தியா இணைகிறது. ஜிபிஎஸ்-ஐ அகற்றி, சொந்த அணு கடிகார வலையமைப்பால் நேரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், நமது தேசிய பாதுகாப்பு வலுப்பெறுவதுடன், உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவும் ஒரு முன்னோடி நாடாக உயர்ந்து நிற்கிறது.