பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிர் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால், அவர் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார் என்ற கருத்தை வெள்ளை மாளிகை ஏற்கனவே மறுத்திருந்தது.
எந்த ஒரு வெளிநாட்டுத் தலைவர்களும் ராணுவ அணிவகுப்புக்கு அழைக்கப்படவில்லை என்றும், ஆசிம் முனிரின் வருகைக்கும் ராணுவ அணிவகுப்புக்கும் சம்பந்தமில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட ஆசிம் முனிர், வாஷிங்டனில் உள்ள ஹோட்டலுக்கு வந்தபோது, அவருக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இந்திய மக்கள் கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. “நீ ஒரு வெட்கக்கேடு! படுகொலை செய்யும் கொடூரன்! சர்வாதிகாரி! சர்வாதிகாரி!” என உரத்த குரலில் மக்கள் கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோஷம் போடுபவர்களை அமெரிக்க காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றபோது, “இது எங்களது பேச்சுரிமை!” என்று மக்கள் வாக்குவாதம் செய்ததால், அங்கு மேலும் பதற்றம் நிலவியது.
எந்த ஒரு ராணுவத் தளபதியும் அமெரிக்காவுக்கு வந்தபோது இதுபோன்ற அவமானத்தை சந்தித்ததில்லை என்றும், அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு கடும் அவமானம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் இதுகுறித்து தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு வந்த நோக்கம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு நிறைவேறுகிறதோ இல்லையோ, அமெரிக்க மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார் என்பது வரலாற்றில் ஒரு ‘அழிக்கப்படாத அவமானமாக’ கருதப்படும் என்றும் பத்திரிகை செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளது.