சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் கசிகின்றன. அதாவது, 2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலிருந்து நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்த ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறதாம். இந்த முடிவுக்கு பின்னால், சிறிய அணிகள் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும், மேலும் நீண்ட தொடர்களை நடத்த வேண்டும் என்ற பெரிய நோக்கம் உள்ளது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 27 டெஸ்ட் தொடர்கள் நடக்கின்றன. இதில் 17 தொடர்கள் வெறும் இரண்டு போட்டிகளுடன் முடிந்துவிடும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் மட்டுமே ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகின்றன.
இந்த நிலையில் ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளாராம். ஐந்து நாள் போட்டிகளை நடத்த ஆகும் அதிக செலவும், கால தாமதமும் சிறிய நாடுகளை டெஸ்ட் கிரிக்கெட் நடத்துவதிலிருந்து தயங்க வைக்கிறது என்பதே இதற்கு காரணம்.
இலங்கை ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ், சமீபத்தில் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தவிர மற்ற அணிகளுக்கு டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாகவே கிடைப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். 2025-ல் இலங்கை வெறும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
“உண்மையாகவே இது வருத்தமளிக்கிறது. இளம் தலைமுறையினர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்தான் விளையாட்டின் சிகரம். நாம் அனைவரும் அதிக டெஸ்ட் போட்டிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் வருடத்தில் 15-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடும்போது, நாம் ஏன் குறைந்தது 10 போட்டிகளாவது விளையாட கூடாது? உலகக் கோப்பைகளை வென்ற நாம், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தகுதியானவர்கள்,” என மேத்யூஸ் வலியுறுத்தினார்.
ஐந்து நாள் போட்டியில் ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படும் நிலையில், நான்கு நாள் டெஸ்ட்டில் 98 ஓவர்கள் வீசப்படும். மேலும் இந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களை ஐசிசி கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.