ரகசியமாக எடுக்கப்படும் சர்வேக்கள்.. நாளுக்கு நாள் தவெகவுக்கு கூடும் மக்கள் ஆதரவு.. திராவிட கூட்டணிகள் அதிர்ச்சி..!

  தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிட கூட்டணிகளும் மாதத்திற்கு இருமுறை ரகசியமாக சர்வதேச நிறுவனங்களை வைத்து சர்வே எடுத்து வருவதாகவும், ஒவ்வொரு சர்வே முடிவிலும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்குத்தான் நாளுக்கு நாள் ஆதரவு…

vijay

 

தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிட கூட்டணிகளும் மாதத்திற்கு இருமுறை ரகசியமாக சர்வதேச நிறுவனங்களை வைத்து சர்வே எடுத்து வருவதாகவும், ஒவ்வொரு சர்வே முடிவிலும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்குத்தான் நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருவதாகவும் வெளிவந்திருக்கும் தகவல், இரண்டு திராவிட கூட்டணிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் தோல்விதான் அடைந்திருக்கிறார்கள். அரசியல் பின்புலம் இருந்ததால் மட்டுமே எம்.ஜி.ஆர். விதிவிலக்காக அரசியலில் வெற்றி பெற்றார். அவருக்கு பின் வந்த எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெறவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். போல, விஜய் அரசியலில் வெற்றி பெறுவார் என்றும், ஆட்சியை பிடிப்பார் என்றும் பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிதான் தனக்கு எதிரி என்பதை முதலில் உறுதி செய்த விஜய், பா.ஜ.க.வும் தனக்கு எதிரிதான் என்றும், பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியிலும் அவர் கண்டிப்பாக இடம் பெற மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது.

அப்படியென்றால், விஜய் ஒரு தனி கூட்டணி அமைப்பார் என்றும், ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க.வை பிடிக்காத வாக்காளர்கள் சுமார் 20 சதவீதம் பேர் இருப்பதால், அவர்களுடைய ஒட்டுமொத்த வாக்குகளும் விஜய்க்குப் போகும் என்றும் கூறப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை பிடிக்காத வாக்காளர்கள் இதுவரை வாக்கு போட வாக்குச்சாவடிக்கே வராத நிலையில், அவர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைப்பது என்பது விஜய்க்கு ஒரு சவாலாக இருந்தாலும், ஒரு சில சுற்றுப்பயணங்கள் மூலம் அதை அவர் நிறைவேற்றி விடுவார் என்றே கூறப்பட்டு வருகிறது.

மேலும், பெண்கள் வாக்குகள், இளைஞர்கள் வாக்குகள், கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்குகள் என விஜய்க்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், விஜய் களத்தில் இறங்கி விட்டால் வேற லெவலில் எழுச்சி இருக்கும் என்று சர்வேக்களின் முடிவுகளில் வந்திருப்பதாக பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில், அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த தமிழக அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், காமராஜருக்கு பிறகு முதல் முறையாக திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சி ஒன்று தமிழகத்தில் அமையப்போகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியலில் இப்படி ஒரு அதிசயம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.