வீட்டில் தங்கம் வைத்திருக்கலாம்.. ஆனால் வீட்டையே தங்கத்தில் கட்ட முடியுமா? தொழிலதிபரின் ஆச்சரிய தங்க வீடு.. நெட்டிசன்கள் விளாசல்..!

  இந்தியாவில் விசித்திரமான மற்றும் ஆடம்பரமான வீடுகளை காட்சிப்படுத்துவதில் பிரபலமானவர் பிரியம் சரஸ்வத். இவர் சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு மாளிகையை பார்வையிட்டார். அந்த மாளிகை முழுக்க முழுக்க 24 காரட்…

gold house

 

இந்தியாவில் விசித்திரமான மற்றும் ஆடம்பரமான வீடுகளை காட்சிப்படுத்துவதில் பிரபலமானவர் பிரியம் சரஸ்வத். இவர் சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு மாளிகையை பார்வையிட்டார். அந்த மாளிகை முழுக்க முழுக்க 24 காரட் தங்கத்தால் மின்னியதால், இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளானது.

பிரியம் சரஸ்வத் வெளியிட்ட வீடியோவில், அந்த மாளிகையின் சுவர்கள், மேற்கூரைகள், ஏன் மின்சார சுவிட்சுகள் கூட தங்கத்தால் பூசப்பட்டிருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அத்துடன், பழைய மற்றும் விலையுயர்ந்த கார்களின் அரிதான தொகுப்பும் அந்த வீட்டில் இருந்தது. சாலைகள் மற்றும் பாலங்களை அமைக்கும் அரசு ஒப்பந்ததாரரான அந்த வீட்டின் உரிமையாளர் அனுப் அகர்வாலிடம் அனுமதி பெற்றே சரஸ்வத் இந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளார். இருப்பினும், இந்த வீடியோ வெளியான பிறகு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

வீட்டின் உரிமையாளர் தனது தனிப்பட்ட ஆடம்பரத்திற்காக பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு வலுத்ததால், பிரியம் சரஸ்வத் தனது அசல் வீடியோவை நீக்கிவிட்டார். ஆனால், கேரள காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கு அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து, பொதுமக்களின் மௌனத்தையும், இத்தகைய செல்வந்த ஒப்பந்ததாரர்களின் பொறுப்புணர்வையும் கேள்வி எழுப்பியது.

கேரளா காங்கிரஸ் தனது ‘எக்ஸ்’ பதிவில், “நமது நெடுஞ்சாலைகள் ஏன் இடிந்து விழுகின்றன, பாலங்கள் ஏன் ஆற்றில் விழுகின்றன? இதற்கான பதில்கள் இங்கே. இந்தூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவர், குழாய்கள் மற்றும் சுவிட்சுகள் தங்கத்தால் செய்யப்பட்ட வீட்டை கட்டியுள்ளார். அமலாக்கத்துறையின் சோதனையிலிருந்து தன்னை பாதுகாக்க, அவர் தனது வீட்டிலேயே ஒரு ‘கௌஷாலா’ கட்டியுள்ளார். கடினமாக உழைத்து ₹40 லட்சம் சம்பாதித்த ‘பனீர் பூரி’ விற்பனையாளரை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று விரும்பியவர்கள், இந்த கனவானின் வீட்டை சோதனை செய்ய தயங்குவார்கள்!” என்று விமர்சித்திருந்தது.

இந்த ‘எக்ஸ்’ பதிவுக்குப் பதிலளித்த ஒரு பயனர், “இப்போது தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இந்த வீட்டை சோதனையிட்டு, ஒரு அரசு ஒப்பந்ததாரர் இவ்வளவு ஆடம்பரமான பங்களாவில் எப்படி வாழ முடியும் என்று விசாரிக்குமா?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

மற்றொருவர், “இந்தியாவில், செல்வம் என்றால் ஒரு சல்யூட்; சாலைகளை சரிசெய்தால் ஒரு அலட்சிய பார்வைதான். கடினமாக உழைத்ததற்காக பானிபூரி விற்பனையாளர் மட்டுமே விசாரிக்கப்படுகிறார்!” என்று ஆதங்கப்பட்டார்.

“மத்தியப் பிரதேசத்தில் சாலைகளின் நிலை பரிதாபமாக இருப்பதில் ஆச்சரியமில்லை!” என்றும் ஒரு கருத்து பதிவாகியிருந்தது.

ஒருவர், “அமலாக்கத்துறை ஏன் எதுவும் செய்யவில்லை? இந்த நபரின் மீதும், அவரது முதல்வர் தொடர்புகள் குறித்தும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்!” என்று வலியுறுத்தினார்.

மற்றொருவர், “அந்த மாட்டுத் தொழுவம் நிச்சயம் வீடியோவுக்காக தற்காலிகமாகத்தான் கட்டப்பட்டது!” என்று சந்தேகம் எழுப்பினார்.

வருமான வரித் துறையை டேக் செய்து, ஒருவர், “உங்களை போன்றவர்களால்தான் பாலங்கள் திறப்பு விழாவுக்கு முன்னரே இடிந்து விழுகின்றன; சாலைகள் ஒரு வருடத்திற்குள்ளேயே குண்டும் குழியுமாகி விடுகின்றன. நீங்கள் தடுப்பதை விட அதிக ஊழலை உருவாக்குகிறீர்கள்!” என்று கடுமையாக விமர்சித்தார்.

நீக்கப்பட்ட வீடியோவில், அனுப் அகர்வால் தனது பயணம் எப்படித் தொடங்கியது என்பதை பகிர்ந்து கொண்டிருந்தார். தனது 25 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரே ஒரு பெட்ரோல் பம்ப் மட்டுமே இருந்ததாகவும், அது குடும்பத்தை நடத்தப் போதாது என்று உணர்ந்து, அரசு ஒப்பந்தப் பணிக்குள் நுழைந்ததாகவும் அவர் கூறியிருந்தார். காலப்போக்கில், அவரது நிறுவனம் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற அரசு கட்டிடங்களை அமைக்கும் பெரிய திட்டங்களை எடுக்கத் தொடங்கியது என்றும் தெரிவித்திருந்தார்.