இன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றிய நிலையில் அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 18 வருட விரதம் முடிவுக்கு வந்து முதல்முறையாக ரஜத் படிதார் தலைமையில் விராத் கோஹ்லியின் கனவு நனவுக்கு வந்தது.
ஐபிஎல் திருவிழாவில் இறுதி நாளான இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடிய நிலையில் முதல் மூன்று பேட்ஸ்மேன் சுமாராக விளையாடி ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் பஞ்சாப் அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெங்களூர் அணியை பொருத்தவரை புவனேஷ் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகிய இருவரும் மிக அபாரமாக பந்து வீசினார் என்பதும் குறிப்பாக ப்ரப்சிமர்ன் சிங் மற்றும் இங்கிலீஷ் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை க்ருணால் எடுத்தார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை ஷெப்பர்ட் எடுக்க தொடக்க ஆட்டக்காரர் ஆர்யாவை ஹாசில்வுட் வீழ்த்தினார். அதன்பின் மிக எளிதாக பின்னர் வந்த பேட்ஸ்மேன்களை பெங்களூரு பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் வெற்றி பெற 29 ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்று சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தாலும் பஞ்சாப் பரிதாபமாக தோல்வி அடைந்தது.