அமெரிக்க அரசு தரவூர் ராணாவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் முடிவை இறுதியாக அமல்படுத்தி கொண்டிருந்த வேளையில், அவரது வழக்கறிஞர் ஜான் டி. கிளைன், அதைத் தடுக்க கடைசி முயற்சியாக ஒரு கடிதம் எழுதியுள்ள தகவல் கசிந்துள்ளது..
ரானா வழக்கறிஞர் ஜான் டி. கிளைன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டாம், இந்திய சிறைகளில் அவருக்கு வேதனை ஏற்படுத்தப்படலாம், அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.
தரவூர் ராணா ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுகளுக்காக ஷிகாகோவில் உள்ள ஒரு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர். டேவிட் ஹெட்லியின் சதித் திட்டத்தில் ராணா மிகக் குறைந்த அளவிலேயே தொடர்புடையவர். இந்தியாவின் மனித உரிமை நிலை, சிறை வசதிகள் மற்றும் அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கூடாது.
ஒரு அமெரிக்க நீதிமன்றத்தில் முறையாக நடைபெற்ற விசாரணையில் ஒரு ஜூரி விடுதலை அளித்த நபரை, அதே குற்றச்சாட்டுக்காக மற்றொரு நாட்டிற்கு ஒப்படைப்பது அமெரிக்க வரலாற்றில் இது முதல் முறையாக இருக்கும். இது, ஒரு ஜூரி வழங்கும் விடுதலை என்பது இறுதியானது என்ற நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும்,” அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்த கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், “தரவூர் ராணாவை இந்தியாவுக்கு ஒப்படைக்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை ஐநா ஒப்பந்தத்தின்படி அனைத்து பன்னாட்டு விதிமுறைகளையும் பின்பற்றுகிறது . மேலும், அவரது சுகாதார நிலையை முன்னிட்டு இந்திய அதிகாரிகளுக்கு மருத்துவ அறிக்கைகள் வழங்கத் தயார் எனவும் கூறினார்.
மேலும் ராணாவுக்கு மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் ஒப்படைப்பு நடைபெறலாம். எனவே மருத்துவத் தகவல்கள் விரைவில் தேவை” என்றும் கடிதத்தில் கூறப்பட்டது. எனவே ராணா வழக்கறிஞரின் கடைசி முயற்சி தோல்வியில் முடிந்தது.
தரவூர் ராணா, பாகிஸ்தானில் பிறந்த கனடிய குடிமகன். 2008ம் ஆண்டு 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிட்டதாக கூறப்படும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த தாக்குதலில் 166 பேர், உட்பட 6 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அவர், இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படாமல் இருப்பதற்காக பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினார். ஆனால், அனைத்து வழிகள் தோல்வியடைந்ததால், கடந்த புதன்கிழமை அன்று NIA அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.