ராஜஸ்தானை சேர்ந்த சுபாஷ் பிஜாரணி மற்றும் ரன்வீர் பிஜாரணி என்ற இரு சகோதரர்கள், தங்கள் சகாக்களுடன் சேர்ந்து சுமார் 70,000 பேரிடம் இருந்து ரூ.2,676 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிகார் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், ‘நெக்ஸா எவர்கிரீன்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். குஜராத்தில் உருவாகி வரும் ‘தோலேரா ஸ்மார்ட் சிட்டி’யில் நிலம் வாங்கி தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர். மேலும், தோலேரா நகரின் வெவ்வேறு திட்டங்களின் படங்களை காட்டி மக்களை நம்ப வைத்துள்ளனர்.
இந்த மோசடி திட்டத்தில், முதலீட்டின் அளவுக்கு ஏற்ப பல்வேறு சலுகைகள், மற்றவர்களை சேர்த்தால் கமிஷன்கள், குறிப்பிட்ட முதலீட்டு இலக்குகளை அடைந்தவர்களுக்கு லேப்டாப், பைக், கார் போன்ற பரிசுகள் என பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளனர். தங்கள் தனிப்பட்ட அடையாள எண்ணின் கீழ் அதிகமான முதலீட்டாளர்களை சேர்த்தால் கூடுதல் கமிஷனும் வழங்கப்படும் என ஆசை காட்டப்பட்டுள்ளது.
ரன்வீர் பிஜாரணி 2014ஆம் ஆண்டு தோலேராவில் நிலம் வாங்க, ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற சுபாஷும் தனது ஓய்வூதிய பணம் ரூ.30 லட்சத்துடன் பின்னர் ஒரு நிலத்தை வாங்கியுள்ளார். இதன் பின்னர், இந்த சகோதரர்கள் ‘நெக்ஸா எவர்கிரீன்’ நிறுவனத்தை 2021ஆம் ஆண்டு அகமதாபாத்தில் பதிவு செய்துள்ளனர். ‘தோலேரா ஸ்மார்ட் சிட்டி’யின் ஒரு பகுதிதான் தங்கள் நிறுவனம் என்றும், தங்களிடம் 1,300 பிகாஸ் நிலம் இருப்பதாகவும், அது உலக தரமுள்ள நகரமாக மாறும் என்றும் நம்பவைத்துள்ளனர்.
இப்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்கள், முதலீட்டுத் திட்டங்கள் என பலவற்றின் மூலம் 70,000-க்கும் அதிகமான மக்களை மயக்கி, பெரும் லாபத்துக்கு ஆசை காட்டியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.2,676 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி பணத்தில், சலீம் கான், சமீர், தத்தார் சிங், ரக்ஷ்பால், ஓம்பால், சன்வர்மால் போன்ற சில முக்கிய அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலம் ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான முகவர்களை உருவாக்கி, அவர்களுக்கு ரூ.1,500 கோடி வரை கமிஷனாக பட்டுவாடா செய்துள்ளனர். மீதமுள்ள பணத்தை கொண்டு 1,300 பிகாஸ் நிலம் வாங்கியதுடன், ராஜஸ்தானில் சொகுசு கார்கள், சுரங்கங்கள், ஹோட்டல்கள், அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கோவாவில் 25 ரிசார்ட்டுகளையும் வாங்கியுள்ளனர். மேலும், ரூ.250 கோடியை ரொக்கமாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை 27 போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டனர்.
இந்த மோசடிக்கு பிறகு, சகோதரர்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூர் காவல்துறையினர் இந்த மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த வியாழக்கிழமை அன்று அமலாக்கத்துறை ‘நெக்ஸா எவர்கிரீன்’ மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையில், ஜெய்ப்பூர், சிகார், ஜுன்ஜுனு, அகமதாபாத் உள்ளிட்ட 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. சோதனைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன என்பதை பார்ப்போம். மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் இடையிலான ஒரு கூட்டு திட்டம்தான் ‘தோலேரா ஸ்மார்ட் சிட்டி’. இது இந்தியாவின் முதல் பசுமை பகுதி ஸ்மார்ட் சிட்டி ஆகும். இதன் பரப்பளவு டெல்லியை விட இரு மடங்கு பெரியது. இங்கு சர்வதேச விமான நிலையம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2042 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை கூறி தான் ராஜஸ்தான் சகோதரர்கள் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது தலைமறைவாகியுள்ளனர்.