குருகிராமின் மிகவும் ஆடம்பரமான ஒரு பகுதியில் வசிப்பவர்கள், அங்கே வாழ்வது எவ்வளவு செலவாகும் என்பது பற்றி ஒரு லிங்க்ட்இன் பதிவு வெளியாகி, இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமின் ஒரு உயர்தர பகுதியில் வசிக்கும் வைபவ் ஜெ. என்பவர், இதுபோன்ற இடத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை தொடர எவ்வளவு நிதிச்சுமை ஏற்படும் என்பதை விரிவாக பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில் “நான் குர்கானில் ஒரு வீட்டில் வசிக்கிறேன். இங்கே மூச்சு விடுவதற்கு மட்டுமே எனக்கு மாதம் 7.5 லட்சம் ரூபாய் தேவை,” என்ற அதிர்ச்சியுடன் தொடங்கியுள்ளார்.
வைபவ் தனது மாத செலவுகளை பட்டியலிட்டபோது, வீட்டு மற்றும் கார் இ.எம்.ஐ., குழந்தைகளின் பள்ளி கட்டணம், வீட்டு வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளம், வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் என பலவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது, “நீங்கள் உண்மையில் ஒப்புக்கொண்டது இதுதான்: 3 கோடி ரூபாய் வீட்டிற்கு ரூ.2.08 லட்சம் இ.எம்.ஐ., பராமரிப்புக்கு மாதம் ரூ.12,000, ‘ஸ்விஃப்ட்’ போன்ற சாதாரண காரில் போக முடியாததால் ரூ.60,000 கார் இ.எம்.ஐ., குழந்தைகளுக்கு சர்வதேச பள்ளி கட்டணம் மாதம் ரூ.65,000, ‘வெளிநாட்டு பயணத்திற்காக மாதம் ரூ.30,000, சமையல்காரர், பணிப்பெண், ஓட்டுநர் போன்ற வீட்டு ஊழியர்களுக்கு மாதம் ரூ.30,000, கிளப் மற்றும் இரவு விருந்துகளுக்கு ரூ.20,000, மேக்கப் தோற்றத்திற்கு மாதம் ரூ.12,000, மற்ற இதர செலவுகளுக்கு ரூ.10,000-க்கும் மேல், பிறந்தநாள் பரிசுகள் மற்றும் திருமண உறைகளுக்கு ரூ.15,000 இதெல்லாம் ஒரு போலி மரியாதைக்கான செலவு என நீள்கிறது.
மாதாந்திரச் செலவுகள் மட்டும் ரூ.5 லட்சத்தை தாண்டும் நிலையில், வைபவ் தனது பதிவில், “இப்போது 30 சதவீத வருமான வரியையும் கணக்கில் கொண்டால், மாதம் 5 லட்சம் ரூபாய் செலவு செய்ய, நீங்கள் ரூ.7.5 லட்சம் சம்பாதிக்க வேண்டும். நாங்கள் சேமிப்பும் செய்யவில்லை, காப்பீடும் வாங்கவில்லை என்று முடிக்கிறார்.
இந்த பதிவு இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஒரு பயனர், “இந்த வருமானத்தில் இருப்பவர்களுக்கு 30 சதவீதம் வரி மட்டும் இல்லை, கூடுதல் கட்டணங்களும் உண்டு. எனவே வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி வரிக்கே போகும். இந்த வாழ்க்கை முறைக்கு குறைந்தபட்சம் 1.2 கோடி ரூபாய் மொத்த சம்பளம் தேவை,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொருவர், “இது கொஞ்சம் பரபரப்பை கிளப்பும் விதமாகவே இருக்கிறது. இப்படி பார்த்தால், பெரும் பிரபலங்களின் செலவுகளை பட்டியலிட்டால் 7.5 லட்சம் கூட போதாது. வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது,” என்று கூறியுள்ளார்.
மற்றொரு பயனர், “நீங்கள் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் நிதி ரீதியாக நிலையானவர் என்று அர்த்தம், இந்த நாடகத்தில் எந்த பயனும் இல்லை,” என காட்டமாகத் தெரிவித்தார். மேலும் ஒரு பயனர், “உங்களுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்! குர்கானில் 15 வருடங்கள் கழித்த பிறகும், இ.எம்.ஐ. சுமை இல்லாவிட்டாலும், இந்த கான்கிரீட் காட்டில் உயிர் வாழ உங்களுக்கு இன்னும் 3 லட்சம் ரூபாய் தேவை!” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “உங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளை சமூகத்தின் பிரச்சனைகளாக மாற்ற வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார்.