ரபேல் போர் விமானத்தின் முக்கிய உதிரிப் பாகங்களை தயாரிக்கும் பொறுப்பு டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மாதத்துக்கு இரண்டு ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் அளவுக்கு டாடா நிறுவனம் உதிரிப் பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் என்றும் கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் ரபேல் போர் விமானங்கள், இந்தியாவுக்கு பாதுகாப்பின் முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன என்பதும், சமீபத்தில் கூட பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், ரபேல் போர் விமானங்கள் கூடுதலாக தயாரிக்க தற்போது திட்டமிட்டுள்ள சூழலில், இந்த போர் விமானத்தின் முக்கிய பாகங்களை தயாரிக்க டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிரான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் எங்களுடைய தோழமை நிறுவனமாக டாடா உள்ளது” என்றும், டாடா நிறுவனம் ரபேல் போர் விமானத்தின் முக்கிய பாகங்களை தயாரித்து கொடுக்கும்” என்றும் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் ஹைதராபாத் தொழிற்சாலை இந்த முக்கிய பாகங்களை தயாரிக்க இருப்பதாகவும், மாதத்திற்கு இரண்டு முழுமையான ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் அளவுக்கு முக்கிய பாகங்கள் உற்பத்தி செய்து தரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரபேல் விமானம், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தது மற்றும் அதன் துல்லியமான செயல்திறனாலும் உலகம் முழுவதிலுமிருந்து இந்த விமானத்திற்கு ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், ரபேலுக்கு தேவைகள் அதிகமாக இருக்கும் நிலையில், டாடா நிறுவனமும் இந்த தயாரிப்பு பணியில் ஈடுபடுவது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
இரட்டை என்ஜினுடன் கூடிய ரபேல் போர் விமானம், மிகச்சிறந்த துல்லிய போர் திறன் கொண்டதாகவும், இது இந்திய விமானப்படையின் வலுவாக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் ரபேல் விமானங்கள் குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விமானங்கள் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள முக்கிய விமான தளங்களில் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.