தமிழகத்தில் “யார் அந்த சார்?” என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியா முழுவதும் “யார் அந்த ‘Madam N’? என்ற கேள்வி எழுப்பப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலிருந்து உளவாளிகளை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர் தான் ‘’Madam N’’ என்றும், இவரது உண்மையான பெயர் நௌஷபா ஷஹ்ஸாத் மசூத் என்றும் தெரிய வந்துள்ளது. இவர் பாகிஸ்தான் உளவுத்துறையான ISI-யுடன் தொடர்புடையவர் என்றும், இந்தியாவில் உள்ள பிரபல யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்த முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவரது கட்டுப்பாட்டின் கீழ் பல ஸ்லீப்பர் செல்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஜோதி உள்பட தற்போது கைது செய்யப்பட்ட சிலர் செயல்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நௌஷபா ஷஹ்ஸாத் மசூத் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய கணவர் பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரி என்றும் கூறப்படுகிறது. இருவருக்குமே ISI மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், இந்தியாவில் 500 உளவாளிகளை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு கொடுத்த டாஸ்க் என்றும் தெரிகிறது.
‘Madam N’ இந்தியாவில் உள்ள இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை சேர்ந்த சமூக ஊடக பிரபலங்களை குறிவைத்ததாகவும், டெல்லி உட்பட பல இந்திய நகரங்களில் அவரது ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பாக உளவு செயல்களில் ஈடுபட ஆட்களை நியமித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறு மாதங்களில், இந்தியாவைச் சேர்ந்த 3,000 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,500 பேர் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், இவர்களில் பலர் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் விசா கிடைக்க, இவருக்கு நெருக்கமான அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சமீப காலமாக பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ‘Madam N’? என்பவரை கைது செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் சில யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் இவருடைய ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.