பூரி ஜெகநாதர் உருவத்தை வெளிநாட்டு பெண்ணின் தொடையில் டாட்டுவாக பதிவு செய்த டாட்டுக்கடையின் உரிமையாளர் மற்றும் டாட்டு கலைஞர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், வெளிநாட்டு பெண் பூரி ஜெகநாதன் கோயிலுக்கு வருகை தந்த நிலையில், ஜெகநாதர் சுவாமியை மறைவான இடத்தில் டாட்டு வரைய வேண்டும் என்று விரும்பினார். இதனை அடுத்து, டாட்டு கலைஞரிடம் தனது தொடையில் வரையுமாறு கூறினார். முதலில், அந்த டாட்டு கலைஞர் அதற்கு தயங்கினார். “கையில் வரையலாமா?” என்று கேட்டார். ஆனால், மறைவான இடத்தில் தான் வேண்டும் என்று அந்த பெண் கூறியதை அடுத்து, வேறு வழியில்லாமல் அவர் தொடையில் ஜெகநாதர் உருவத்தை டாட்டுவாக வரைந்தார்.
மேலும், இது குறித்த புகைப்படத்தை அந்த பெண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில், பக்தர்கள் கொந்தளித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டாட்டு கலைஞர் மற்றும் அந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அந்த வெளிநாட்டு பெண்மணி தனது சமூக வலைதளத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். “பூரி ஜெகநாதரை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. மறைவான இடத்தில் டாட்டு வரைய வேண்டும் என்று தான் விரும்பினேன். 15 நாட்கள் கழித்து நான் டாட்டுவை அழித்துவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
டாட்டு வரைந்து 15 நாட்கள் கழித்தே அதை அழிக்க முடியும் என்றும், அதற்கு முன்பு அழித்தால் தோலில் பிரச்சனை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.