ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை உடனடியாக குறைத்து, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஈரான் அதிபர் டாக்டர் பெசெஷ்கியானுடன் பேசினேன். தற்போதைய சூழ்நிலையை பற்றி விரிவாக விவாதித்தோம். அண்மைய பதற்றம் அதிகரிப்பு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினோம். பிராந்தியத்தில் விரைவில் அமைதி, பாதுகாப்பு, மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க, உடனடி பதற்றத் தணிப்பு, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரமே ஒரே வழி என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் அதிபர் பெசெஷ்கியன், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிறகு பிரதமர் மோடியை தொடர்புகொண்டு, மாறிவரும் நிலைமை குறித்து விளக்கினார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், பிராந்திய அமைதியை மேம்படுத்துவதில் இந்தியா ஒரு “நண்பன் மற்றும் கூட்டாளி” என்று பெசெஷ்கியன் குறிப்பிட்டார். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், மோதலை தணித்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா, நேற்று ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய முக்கிய அணுசக்தித் தளங்கள் மீது பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் டொமாகாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்தியா போரை நிறுத்த முயற்சித்து வருகிறது.
ஈரான் – இஸ்ரேல் மோதல் இந்தியாவுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் 85% க்கும் மேல் இறக்குமதி செய்யப்படுவதால், வளைகுடா வழியாக போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டால் எரிசக்தி விலை உயர்ந்து, இந்தியாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை அதிகரிக்கும். ஹோர்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய போக்குவரத்து பாதைகளில் ஏற்படும் பதற்றம் உலக எண்ணெய் விலைகளை பாதிக்கக்கூடும்.
மேலும் இன்னொரு பக்கம் இந்தியா – இஸ்ரேல் உறவுகள் வலுப்பெற்று வரும் வேளையில் இந்த மோதல் தொடர்ந்தால் இந்தியாவுக்கு தர்ம சங்கடம் ஏற்படும் அதுமட்டுமின்றி மேற்கு ஆசியாவில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, பிராந்திய அமைதி என்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமை மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.