பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். அண்மையில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என்ற வாஷிங்டனின் தொடர்ச்சியான கூற்றுகளை உறுதியாக மறுத்து, டிரம்ப்புக்கு அவரது நாட்டிலேயே பதிலடி கொத்தார் மோடி.
கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டில் டிரம்ப் முன்கூட்டியே கிளம்பி சென்றதால், டிரம்ப் – மோடி திட்டமிட்ட சந்திப்பு ரத்தானது. இந்த நிலையில், தொலைபேசி அழைப்பின்போது, பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா ஒருபோதும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை நாடியதில்லை, ஏற்றுக்கொண்டதில்லை, எதிர்காலத்திலும் ஏற்காது என்பதை மோடி திட்டவட்டமாக தெளிவுபடுத்தினார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் ராணுவ வழித்தடங்கள் வழியாக நேரடியாகவே நடந்தன என்றும், இது பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரிலேயே நடந்தது என்றும் மோடி டிரம்ப்பிடம் விளக்கினார். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் அல்லது வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
“இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை, இப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் ஏற்காது,” என்று மோடி டிரம்ப்பிடம் கூறியது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்த வலுவான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டியது.
பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் துல்லியமான பதிலடியான ‘ஆபரேஷன் சிந்துர்’ குறித்தும் பிரதமர் விளக்கினார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்ட இந்த ராணுவ நடவடிக்கை பற்றி டிரம்ப்பிடம் எடுத்துரைத்தார்.
பயங்கரவாதத்தை இந்தியா ஒரு நிழல் யுத்தமாக அல்லாமல், ஒரு முழு அளவிலான போராகவே கருதுகிறது என்று மோடி வலியுறுத்தினார். “பாகிஸ்தானின் குண்டுகளுக்கு இந்தியா குண்டுகளால் பதிலளிக்கும்,” என்று அவர் எச்சரித்து, இந்தியாவின் உறுதிப்பாடு முன்னெப்போதையும் விட வலிமையானது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அதிபர் டிரம்ப் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த அவர், உச்சி மாநாட்டிற்கு பிறகு அமெரிக்காவில் சிறிது நேரம் தங்கி செல்லுமாறு மோடியை அழைத்தார். ஆனால், பிரதமர், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகள் காரணமாக அந்த அழைப்பை மறுத்தார்.
இந்தத் தொலைபேசி உரையாடல், மத்தியஸ்தம் மற்றும் வர்த்தகம் சார்ந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை உறுதியாக நிராகரித்தது. இந்த அமெரிக்க கூற்றை இந்தியா தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
கடந்த சில நாட்கள் வரை எந்த ஊடகத்தை பார்த்தாலும் நான்தான் இந்தியா – பாகிஸ்தானை போரை நிறுத்துனேன் என்று கூறி வந்த ட்ரம்புக்கு பிரதமர் மோடியின் இந்த தொலைபேசி பேச்சு ஆப்பு வைத்ததாக கருதப்படுகிறது. அதுவும் அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டே அவர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது டிரம்ப் அடங்கி இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவார் என எதிர்பார்க்கலாம்