அதிமுக-பாஜக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சேரும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த அருண்ராஜ், பேட்டி ஒன்றில் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அருண்ராஜ் கூறுகையில், “கொள்கை எதிரி பாஜகவுடன் எந்த காரணத்தை முன்னிட்டும் கூட்டணி இல்லை” என்று உறுதிபட தெரிவித்தார். “திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக தனது கொள்கை எதிரி என்றும் முதல் மாநாட்டிலேயே விஜய் தெளிவாக கூறிவிட்டார். எனவே, இந்த இரண்டு கட்சிகளுடனும் எந்த காரணத்தை முன்னிட்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
“கடந்த 30 வருடத்தில் திமுக அரசு போல் ஒரு மோசமான ஆட்சியை யாருமே பார்த்ததில்லை. இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிகமான ஊழல் தமிழ்நாட்டில்தான் உள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்வதை விட, ஊழலில்தான் திமுக உள்ளது என்பதுதான் பொருத்தமானது,” என்று திமுக அரசு மீது அருண்ராஜ் கடுமையாக விமர்சித்தார்.
“எங்கள் கட்சியின் கொள்கைகள் திமுக கொள்கைகள் மாதிரியே இருக்கிறது என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த கொள்கைகள் எல்லாம் இந்த மண்ணின் கொள்கைகள். திமுக என்ன பாட்டர்ன் வாங்கி வைத்திருக்கிறதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
நடிகர் விஜய் குறித்து பேசிய அருண்ராஜ், “8 மணி நேரம் ஒரு மனிதன் நின்று கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளைக் கொடுக்கிறார் என்றால், அவரது மனிதநேயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விஜய் அடிப்படையில் ஒரு நல்ல மனிதர், மிகவும் எளிமையானவர். அவரை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அவரது ரசிகராக இல்லாமல் யாரும் வெளியே வர முடியாது. 2026ஆம் ஆண்டு அவர் முதலமைச்சர் ஆன பின்னரும் இதே எளிமையை அவர் கடைபிடிப்பார் என்று நான் அடித்து சொல்கிறேன்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“மதவாத, பிளவுவாத சக்திகளுடன் எந்த தொடர்பும், எந்த அரசியல் கூட்டணியும் இருக்க கூடாது என்பதில் இன்றும் விஜய் தெளிவாக உள்ளார்,” என்று அருண்ராஜ் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். “தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே ஆர்எஸ்எஸ்-பாஜக சித்தாந்த ரீதியில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, தமிழக வெற்றிக்கழகம் அதனுடன் கூட்டணி சேராது” என்று அவர் மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்தார்.
தான் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக இருக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ன திட்டம் கொண்டு வருகிறதோ, அந்தத் திட்டத்தைத்தான் தாங்கள் அமல்படுத்த வேண்டிய நிலையில் இருந்தோம் என்றும், அத்திட்டத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும்கூட எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றும் அருண்ராஜ் கூறினார். “அதனால், அதிகாரி பணிகள் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவேதான், மக்களுக்கு நேரடியாக சேவை செய்யலாம் என்று ஐ.ஆர்.எஸ். அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.