விராத் கோலி மீது போலீஸ் புகார். கைது செய்யப்படுகிறாரா? கோபத்தில் ரசிகர்கள்..!

  பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த RCB வெற்றி விழா கொண்டாட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விராட் கோலி மீது…

விராட் கோலி

 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த RCB வெற்றி விழா கொண்டாட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விராட் கோலி மீது தனியாக ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, இந்த வெற்றி விழாவை சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாடும்போது லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிவமோகா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர், இந்த விபத்துக்கு விராட் கோலிதான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு பதில் அளித்த காவல்துறை, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த புகாரையும் அந்த வழக்கின் கீழ் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரில் விராட் கோலி மீதான புகார் இணைக்கப்படும் நிலையில், ஏற்கனவே இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், விராட் கோலி கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

RCB அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட விசாரணையில் RCB அணி வெற்றி பெற்ற மறுநாளே இந்த விழாவை நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த ஆலோசனை RCB அணியினரால் புறக்கணிக்கப்பட்டது என்றும், அதன் பின் தங்களது செல்வாக்குமிக்க நபர்களை வைத்து இந்த விழாவுக்கு அனுமதியை பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் வெற்றி ஊர்வலத்தை பற்றி ட்வீட் செய்வதற்கு முன், போலீசாரை RCB அணி அழைக்கவில்லை என்றும், லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி வந்ததை அடுத்து, அவசர அவசரமாக அனுமதி கேட்க சென்றதாகவும், ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விழாவை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முக்கிய நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், RCB அணியின் மார்க்கெட்டிங் தலைவர் சோசலே என்பவரும் பெங்களூரிலிருந்து வெளியூருக்கு செல்ல முற்பட்டபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தனது கைது சட்டவிரோதமானது என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கைது நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. கூடுதலாக விராட் கோலி கைது செய்யப்படுவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.