தமிழக அரசியல் களம் எப்போதும் உணர்வுகளாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டது. இங்கு ஒரு தலைவரை மக்கள் மனதார ஏற்றுக்கொண்டுவிட்டால், அவரை அவ்வளவு எளிதில் அவர்கள் கைவிடுவதில்லை. அந்த வகையில், சினிமா என்னும் பிரம்மாண்ட ஊடகத்தின் வழியே மக்களின் இதயங்களில் குடியேறி, தற்போது தீவிர அரசியலில் தடம் பதித்திருக்கும் விஜய்யை மக்கள் அவ்வளவு சீக்கிரம் வெறுத்துவிட மாட்டார்கள் என்ற வாதம் அரசியல் வட்டாரங்களில் பலமாக ஒலிக்கிறது. தமிழக மக்கள் எப்போதுமே தலைவர்களிடம் ஒருவித ஈர்ப்பையும், தங்களை இரட்சிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பவர்கள். திரையில் பார்த்த ஒரு நாயகன் தங்களின் நிஜ வாழ்க்கை நாயகனாக மாறும்போது, அவனுக்கான ஆதரவு என்பது வெறும் வாக்குகளாக மட்டும் இருப்பதில்லை; அது ஒரு பெரும் உணர்வு பூர்வமான பிணைப்பாக மாறிவிடுகிறது.
இதற்கு நம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த உதாரணங்கள் உண்டு. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகளாலும், விமர்சகர்களாலும் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு, ‘கொடுங்கோல் ஆட்சி’ என்று முத்திரை குத்தப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை நாம் மறந்திருக்க முடியாது. அதிகார பலம், அடக்குமுறை என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது அடுக்கப்பட்டாலும், அதே தமிழக மக்கள் தான் அவரை மீண்டும் மீண்டும் அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். மக்கள் ஒரு தலைவரிடம் தப்பு செய்வதை விட, அந்த தலைவர் தங்களுக்கானவர் என்ற நம்பிக்கையை தான் முதன்மையாக பார்க்கிறார்கள். ஜெயலலிதாவிடம் இருந்த அந்த ஆளுமையும், மக்களுக்கான நலத்திட்டங்களும் எப்படி அவரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க வைத்ததோ, அதேபோல் விஜய்யும் மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து செயல்படும்போது அவரை மக்கள் தங்களின் தலைவனாக கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
விஜய்யின் அரசியல் வருகை என்பது திடீரென வானத்தில் இருந்து குதித்தது அல்ல. அவர் கடந்த சில ஆண்டுகளாகவே தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, விலையில்லா விருந்தகம் நடத்துவது என அடித்தட்டு மக்களுக்கான பணிகளை திட்டமிட்டு செய்து வந்தார். ஒரு தலைவர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்பே மக்களின் துயர் துடைக்க துடிக்கும்போது, அவர் அதிகாரத்திற்கு வந்தால் நிச்சயம் ஒரு நல்லாட்சியை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இயல்பாகவே எழுந்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியை விஜய் தரும்பட்சத்தில், தமிழக மக்கள் அவரை தங்கள் வீட்டு பிள்ளையாக கருதி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி, அவரை தங்களின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
உண்மையில் விஜய்யின் அரசியல் வளர்ச்சியை உற்று நோக்கினால், அதற்கு அவருடைய உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கிய காரணம் எதிர்க்கட்சிகளின் அதீத பயமும், விமர்சனங்களும் தான். விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று விவாதித்த காலம் போய், அவர் கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை எதிர்க்கட்சிகள் அவரை பற்றி பேசிப் பேசியே, அவரை மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க வைத்துவிட்டன. விஜய்யை அரசியல் ரீதியாக புறக்கணிக்க நினைத்தவர்கள், தினமும் காலையில் அவர் பெயரை சொல்லியே தங்களின் அரசியல் உரைகளை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். விளைவு, நடுநிலையாக இருந்த பொதுமக்களும் விஜய் மீது கவனம் செலுத்தத் தொடங்கினர், எதிர்க்கட்சிகளே அவரை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைப்பதற்கான அஸ்திவாரத்தைப் பலமாக அமைத்துக் கொடுத்துவிட்டன.
இந்த சூழலிலும், எதிர்க்கட்சிகள் தங்கள் பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்று கொண்டதாக தெரியவில்லை. இப்போதும் அவர்கள் விஜய்யை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் பேசிப் பேசி தங்களின் சொந்த இமேஜைத் தாங்களே டேமேஜ் ஆக்கி கொள்கிறார்கள். விஜய்யின் கொள்கைகளையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பதை விட்டுவிட்டு, வெறும் தனிநபர் துவேஷத்தையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் எப்போதும் தங்களை நோக்கி பேசும் தலைவர்களையே விரும்புவார்களே தவிர, அடுத்தவர்களைப் பற்றிப் புறம் பேசும் பழைய அரசியல்வாதிகளை நிராகரிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் இன்னும் உணரவில்லை.
இறுதியாக, தமிழக அரசியல் என்பது ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. பழைய அரசியல் சித்தாந்தங்களுக்கும், ஒருவரையொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்ளும் அரசியல் கலாச்சாரத்திற்கும் மக்கள் சலிப்படைந்துவிட்டனர். இந்த சூழலில், விஜய்யின் வருகையும், அவரை நோக்கி வைக்கப்படும் கண்மூடித்தனமான விமர்சனங்களும் அவருக்கு சாதகமான ஒரு அலையையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அவரை எவ்வளவு தூரம் வீழ்த்த நினைக்கிறார்களோ, அவ்வளவு தூரம் அவர் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக வேரூன்றி வருகிறார். காலத்தின் சக்கரம் சுழலும் போது, மக்களின் பேராதரவோடு விஜய் தமிழக அரசியலில் ஒரு புதிய சரித்திரத்தை படைப்பதையும், அவரை எதிர்த்தவர்களே வியந்து பார்ப்பதையும் நாம் காணத்தான் போகிறோம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
