பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஒருவருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட பாகிஸ்தான் செல்ல தனக்கு விசா கிடைக்கவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆத்னன் ஷமி என்பவர் பாகிஸ்தானில் பிறந்த நிலையில், இந்திய குடிமகனாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்திய மக்களின் அன்பு மிகவும் உண்மையானது” என்றும், “பாகிஸ்தானும், அங்கு உள்ள ஐஎஸ்ஐ அமைப்பும் தன்னை வெறுத்தது” என்றும் தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த இவரது தந்தை பாகிஸ்தான் விமானப்படையில் இருந்தவர். ஆனாலும், இவர் லண்டனில்தான் படிப்பை முடித்தார். அரசியல் அறிவியல் படித்து, அதன் பின்னர் சட்டத்தில் பட்டம் பெற்றார். ஆனால், ஐந்து வயது முதல் இசையில் ஆர்வம் இருந்ததால் இசைதான் அவருக்கு முழுமையான தொழிலாக மாறியது.
இந்த நிலையில், “நீங்கள் பாகிஸ்தானில் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து,” என்று கூறிய பாகிஸ்தான் அரசு, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்த நிலையில், இந்தியாவுக்கு வந்ததாகவும், இந்தியா தன்னை அரவணைத்து குடியுரிமை அளித்ததாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இந்திய குடிமகனாக மாறிய நிலையில், பணத்திற்காகத்தான் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், தன்னுடைய குடும்பம் மிகவும் பணக்கார குடும்பம் என்றும், பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை விட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்து, ஜீரோவில் இருந்து என்னுடைய வாழ்க்கையை தொடங்கினேன் என்றும், ஒரு உண்மையான கலைஞனுக்கு ஊட்டச்சத்து பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களே என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் தனது தாய் காலமான போது, இறுதிச் சடங்கு கூட கலந்து கொள்ள முடியவில்லை என்றும், இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பினாலும் பாகிஸ்தான் அரசு தனக்கு விசா வழங்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.மேலும் இவர் பாகிஸ்தானை தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த சில மணி நேரத்தில் ஜெய்ஹிந்த் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
