தஜிகிஸ்தான் நாட்டில் நடந்த ஐநா மாநாட்டில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம் காட்டிய நிலையில், அதே மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா அதற்கு பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தான், தாஜிகிஸ்தான் நடைபெற்ற ஐநா மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.
இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டிய நிலையில், அதே மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கீர்த்திவர் தன்சிங், “பயங்கரவாதத்தின் மூலமாக ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்” என்றும், “இந்த மேடையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியது தங்களுக்கு அதிர்ச்சி அளித்தது” என்றும், “இந்த முயற்சியை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “சிந்து நதிநீர் ஒப்பந்தம் வேறுபடுவதாக இந்தியாவை குற்றம் சாட்டுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என்றும் கூறிய அவர், “பாகிஸ்தானில் இருந்து தொடர்ச்சியாக வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதமே இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை தடை செய்ய முக்கிய காரணம்” என்றும் தெரிவித்தார்.
ஆனால், “இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவது தண்ணீரை ஆயுதமாக்குவதற்கு சமம்” என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர், “சிந்து நதியின் நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவை இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்” என்றும், “இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் வருத்தத்துடன் கண்டிக்கிறது” என்றும் தெரிவித்தார். மேலும் “குறுகிய கால அரசியல் லாபங்களுக்கு அப்பாவி மக்களின் வாழ்க்கையை வழியாக்கக் கூடாது” என்றும், “பாகிஸ்தான் இதை அனுமதிக்காது” என்றும் அவர் கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர், “இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு சூழ்நிலைகள் அடிப்படையாக மாறிவிட்டன” என்றும், “அது மறுக்க முடியாத உண்மை” என்றும் கூறிய அவர், “பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அடங்கும் வரை சிந்து நதிநீரில் இருந்து ஒரு துளி நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாது” என்றும் தெரிவித்தார்.
“இந்தியா மீது குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, பாகிஸ்தானில் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், “இந்த ஒப்பந்தம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கையெழுத்தானது. நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் தொடரும்” என்றும் மத்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.