இன்று வெளியான பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கையில், பாகிஸ்தானின் கடன் நிலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் நிதி நிலையைப் பற்றிய கவலைக்கிடமான நிலையை காட்டுகிறது. இப்படி ஒரு கடனில் மூழ்கும் நாடு, திவாலாகும் நிலையில் உள்ள நாடு, இந்தியாவுக்கு எதிராக சரிசமமாக மோதுவதா என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்று வெளியான ஆய்வறிக்கையில் 2025 மார்ச் மாதம் முடிவில் பாகிஸ்தானின் மொத்த பொது கடன் 7,60,070 கோடி பாகிஸ்தான் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த கடன் தொகையாகும். இந்த தொகை இந்திய ரூபாயில் 2,31,000 கோடி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் 269.344 பில்லியன் ஆகும்.
இந்த கடன் கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது; 2020-21 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் கடன் வெறும் 3,98,600 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் பொது கடன் 1,73,800 கோடி ஆக இருந்தது. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாக சீர்கேடு, தீவிரவாதிகளுக்கு ஆதரவு போன்ற நடவடிக்கைகளால் பாகிஸ்தானின் கடன் ஐந்து மடங்கு அளவில் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.
7,60,070 கோடி என்ற இந்த எண்ணிக்கையில் 5,15,180 கோடி உள்நாட்டு கடன் மற்றும் 2,44,890 கோடி வெளிநாட்டு கடன் ஆகும். பொருளாதார ஆய்வு அறிக்கையில் தவறாக நிர்வகிக்கப்பட்ட கடன், உயரும் வட்டி சுமைகளை உருவாக்கி நீண்டகால நிதி நிலைத்தன்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பை பாதிக்கக்கூடும்” என்றும், நாடு திவால் நிலைக்கு கொண்டு செல்லும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் IMF அமைப்பிடம் இருந்து 103 கோடி அமெரிக்க டாலர் உதவியை பெற்றுள்ளது. இதையும் சேர்த்தால் 2025 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கடன் 6.7 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளிடமிருந்து மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து நிதி பெறுவதையே கொள்கையாக கொண்டுள்ளது. உள்நாட்டு வருவாயை அதிகரிக்கவும், கடனை குறைக்கவும் எந்த முயற்சியும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாம் எந்த நாட்டுக்குச் என்றாலும், நம்மை கடன் வாங்க வந்தவர்களாக என்று நினைக்கிறார்கள் என கூறியுள்ளார்.
சிறிய நாடுகள் கூட பொருளாதார ரீதியில் பாகிஸ்தானை முந்திவிட்டது, ஆனால் நாம் கடந்த 75 ஆண்டுகளாக கடன் வாங்கி கொண்டே இருக்கிறோம் என்று அதிருப்தியுடன் தெரிவித்தார்.
உலக வங்கியின் சமீபத்திய கணிப்புகளின்படி பாகிஸ்தானில் சுமார் 45% மக்கள் வறுமையில் உள்ளனர்; 16.5% மக்கள் மோசமான வறுமையில் வாழ்கின்றனர். IMF மற்றும் உலக நாடுகள் தரும் நிதி உதவிகளை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தவறாக பயன்படுத்தி வருவதால் தான் பாகிஸ்தான் தற்போது மோசமான பொருளாதார நிலையை கொண்டுள்ளது என்றும், இனியாவது சொந்த நாட்டின் மக்கள் நலனில் கவனம் செலுத்தி, தீவிரவாதத்திற்கு ஆதரவு தருவதற்கும், தீவிரவாதத்திற்கு செலவு செய்வதையும் நிறுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.