மும்பை லோக்கல் ரயில் என்றாலே, பயணிகள் படியில் தொங்கிக் கொண்டு செல்வதும், ஆபத்தான பயணம் செய்வதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
மும்பை லோக்கல் ரயிலில் எப்போதும் அதிக கூட்டம் இருக்கும் என்றும், குறிப்பாக பயணிகள் ரயில் வந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதும், ரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கு வழி விடாமல் கூட சில சந்தர்ப்பங்களில் சம்பவங்கள் நடைபெறும் என்பதும் தெரிந்தது. இதனை சரி கட்ட கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மும்பையின் தானே, மும்ப்ரா லோக்கல் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து 10 முதல் 12 பேர் கீழே விழுந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும், இந்த விபத்துக்கு அதிக கூட்டம் தான் காரணம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளன.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர் என்றும், விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் காயமடைந்தவர்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மத்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தானே மற்றும் மும்ப்ரா ரயில் நிலையத்தில் கூட்டம் காரணமாக பயணிகள் சிலர் கீழே விழுந்துள்ளனர் என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக உள்ளூர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவ்ஸ் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார். மேலும், இனிமேல் இதுபோன்ற விபத்து நடக்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக மும்பையில் உள்ள லோக்கல் ரயில் அனைத்திலும் ஆட்டோமேட்டிக் கதவு மூடும் வசதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து மும்பை லோக்கல் ரயில்களிலும் ஆட்டோமேட்டிக் டோர் ஏற்பாடு செய்துவிட்டால், ரயில் நின்ற பிறகு தான் ஏறவும் முடியும், இறங்கவும் முடியும் என்பதால், அதே போல் கதவு மூடிய பின்னர் தான் ரயில் கிளம்பும் என்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், இதனை போர்க்கால அடிப்படையில் உடனடியாக ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.