39 வயதான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டதாரி ஒருவர் தனக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், உணவு டெலிவரி செய்யும் நபராக பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
டிங் யுவான்ஷாவ் என்ற இந்த இளைஞர் 2004 ஆம் ஆண்டில் சீன பல்கலை தேர்வில் கிட்டத்தட்ட முழுமையான மதிப்பெண் பெற்று, புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பின்னர், பீகிங் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலை பட்டமும், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டமும், இறுதியாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் மற்றொரு முதுகலை பட்டமும் பெற்றார்.
இவ்வளவு பெரிய கல்வித் தகுதிகள் இருந்த நிலையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் டிங்கின் முதுமுனைவர் ஆராய்ச்சி பணியில் சேர்ந்தார். ஆனால் இவரது பணி ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகு, அவர் வேறு வேலைக்கு ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பி, 10க்கும் மேற்பட்ட நேர்காணல்களில் பங்கேற்றார். இருப்பினும், இவருக்கு ஏற்ற ஒரு நல்ல வேலையை பெற முடியவில்லை.
வேறு வழியின்றி, அவர் சிங்கப்பூரில் ஒரு உணவு டெலிவரி ஊழியராக பதிவு செய்து கொண்டார். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உழைப்பதன் மூலம் வாரத்திற்கு சுமார் ரூ.47,000 சம்பாதிப்பதாக தெரிவித்தார். “இது ஒரு நிலையான வேலை. இந்த வருமானத்தில் நான் என் குடும்பத்தை நடத்த முடியும். கடினமாக உழைத்தால், கண்ணியமான வாழ்க்கையை வாழலாம். இது ஒரு மோசமான வேலை அல்ல,” என்று டிங் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். டெலிவரி செய்யும் போது உடற்பயிற்சி கிடைக்கும் கூடுதல் நன்மையையும் அவர் குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு, டிங் தனது தாய்நாடான சீனாவுக்கு திரும்பி, தற்போது பீஜிங்கில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிகிறார். படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காததால் இந்தியாவில் ஏற்கனவே லட்சக்கணக்கான உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வரும் நிலையில் வேறு வழியின்றி இந்த நபரும் சீனாவுக்கு திரும்பி உணவு டெலிவரி பணியை செய்து வருகிறார்.
சாதாரண படிப்பு படித்தவர்கள் உணவு டெலிவரி வேலையை செய்தால் சரி, ஆனால் இவ்வளவு பெரிய படிப்பை படித்துவிட்டு நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் அவரது பணி இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரும் உணவு டெலிவரி வேலை செய்வதை நெட்டிசன்கள் ரசிக்கவில்லை. அவரது தகுதிக்கேற்ப வேலை கொடுக்காத நாடுதான் வெட்கப்பட வேண்டுமே தவிர அவர் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி என்று இந்த வேலைக்கு வந்துள்ளதாகவும் அவரது திறமைக்கும் கல்விக்கும் மதிப்பு கொடுத்து அவருக்கு உரிய வேலையை வழங்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.