இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது, தங்கள் நாட்டின் சைபர் வீரர்கள் தான் விளக்குகளை அணைத்தார்கள் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் கூறியிருப்பது, காமெடியின் உச்சக்கட்டமாக உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக, தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி, திடீரெனப் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த விளக்குகளும் அணைக்கப்பட்டன.
இந்த போட்டியை குறிப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப், “இந்தியாவுடன் நடக்கும் ஒரு பெரிய சைபர் போரில், பாகிஸ்தான் சைபர் வீரர்கள் ஐபிஎல் போட்டியின்போது விளக்குகளை அணைத்துவிட்டனர்; அதனால்தான் போட்டி நின்றது,” என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய அணைகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் தங்கள் சைபர் வீரர்கள் அணுகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் கூறிய இந்த கூற்றுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள நெட்டிசன்கள் கூட இதை நம்ப தயாராக இல்லை என்பது சமூக வலைத்தள கமென்ட்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தான் முழுவதும் கடுமையான மின்சார தட்டுப்பாடு இருக்கும் நிலையில், “இந்தியாவில் உள்ள விளக்குகளை அணைத்தோம்” என்று கூறியதை எப்படி நம்ப முடியும் என்று பாகிஸ்தானிய நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய நெட்டிசன்களும் சற்றும் தாமதிக்காமல், மீம்ஸ்களை போட்டு தாளித்துவிட்டனர். “எங்கள் விளக்குகளை அணைத்ததை பற்றிப் பெருமையாகப் பேசுவதற்கு முன், முதலில் நீங்கள் உங்கள் மின்சார கட்டணத்தைச் கட்டுங்கள்,” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “ஐபிஎல் விளக்குகள் வைஃபை மூலம் இயங்குவதில்லை; உங்கள் அண்டை வீட்டின் ரவுட்டரை போல அவற்றை ஹேக் செய்ய முடியாது,” என்று இன்னொருவர் எழுதினார். “விளக்குகளை அணைப்பதெல்லாம் ஒரு சைபர் வெற்றி என்றால், என் மூன்று வயது மகன் ஒருமுறை நான் ஜூமில் பேசிக்கொண்டிருந்தபோது வைஃபையை துண்டித்தான். அப்படிப் பார்த்தால் அவன் தான் உலகளாவிய சாதனையாளர்,” என்று மற்றொருவர் நகைச்சுவையாக பதிவிட்டார்.
“உலகமெல்லாம் சைபர் பாடங்கள் ஒரு மாதிரி எடுத்துக்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானில் மட்டும் வேறு பாடங்கள் எடுக்கிறார்கள் என்பதை நான் இப்போதுதான் புரிந்துகொண்டேன்,” என்று இன்னொருவர் காமெடியாகத் தெரிவித்து இருந்தார். மொத்தத்தில், பாகிஸ்தான் அமைச்சரின் கூற்றை இந்திய நெட்டிசன்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் நெட்டிசன்களுமே கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், சந்தானம் படத்தில் இடம்பெற்ற காமெடியைப்போல, “ஒருவேளை பாகிஸ்தான் சைபர் வீரர்கள் அமைச்சரிடம் இதை பொய்யாக கூறி இருப்பார்கள்; ‘நம்பவில்லை என்றால் சாப்பாடு கிடையாது’ என்று சொல்லி இருப்பார்கள் போல. அதனால்தான் அமைச்சர் இவ்வாறு கூறுகிறார்,” என்று கூறியதும் காமெடியின் உச்சமாக உள்ளது.