ஒரு பிரெஞ்சு சமையல்காரரின் புதிய, அதிரடியான கொள்கை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆம்ப்வாஸ் நகரில் அமைந்துள்ள ‘L’îlot’ என்ற சிறிய உணவகத்தின் உரிமையாளர் ஆலிவர் வின்சென்ட், ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளார். அது என்ன தெரியுமா? முன்பதிவு செய்ததைவிட குறைவான அல்லது அதிகமான நபர்களுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுதான் அது!
ஏன் இந்த முடிவு? முன்பதிவு செய்துவிட்டு வராமல் இருப்பது மற்றும் திடீரென ஆட்கள் அதிகமாக வருவது போன்ற தொடர்ச்சியான சிக்கல்களால் ஏற்பட்ட விரக்திதான் இதற்குக் காரணம் என்கிறார் வின்சென்ட்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார். அதன்படி, முன்பதிவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உணவகத்திற்கு முன்கூட்டியே தகவல் தராமல் தவறும் வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் அல்லது வராத நபருக்கும் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும். “எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்தால் நிச்சயம் அபராதம் உண்டு…” என்று அந்த பதிவில் எச்சரித்திருந்தார்.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, இந்த பிரச்சனை தொற்றுநோய் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதாக வின்சென்ட் குறிப்பிட்டார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு வாடிக்கையாளர் தனது முன்பதிவை பலமுறை மாற்றியபோதுதான் நிலைமை மேலும் மோசமடைந்தது.
“சுமார் பத்து மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்ட பிறகு, முதலில் எட்டு பேர் வருவார்கள் என்று சொன்னார், பிறகு ஒன்பது பேர் என்றார். ஆனால், இறுதியில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மன்னிப்பும் கேட்காமல் ஏழு பேர் மட்டுமே வந்தனர்,” என்று வின்சென்ட் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
எங்கள் உணவகம் மிகவும் சிறியது. அதன் ஒவ்வொரு இருக்கையும் நிரம்புவதை பொறுத்துதான் லாபம் ஈட்ட முடியும் என்பதால், ஒரு சிறிய முன்னறிவிப்பு கூட எவ்வளவு பெரிய குழப்பத்தை தடுக்கும் என்பதை அவர் விளக்கினார்.
“இப்போதெல்லாம் எல்லோரிடமும் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் பாக்கெட்டில் தொலைபேசி இருக்கிறது. முன்பதிவு செய்ய முடியும்போது, நாங்கள் குறைவாக வருகிறோமா, அதிகமாக வருகிறோமா, அல்லது நாங்கள் வரவில்லையா என்பதை தெரிவிக்கவும் முடியும் அல்லவா?” என்று வின்சென்ட் கேள்வியெழுப்பினார்.
“நாங்கள் இங்கு இருப்பது வேலை செய்யத்தான். மேசைகள் காலியாக இருக்கவோ, வாடிக்கையாளர்கள் இல்லாமல் இருக்கவோ இல்லை,” என்றும் அவர் உறுதியாக கூறினார்.
ஆனால், இந்த விதிமுறையை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவசரம் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வாடிக்கையாளர்களுக்கு இது நியாயமற்றது என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஒரு பயனர், “சமையலறையில் உங்களுக்கு பிரச்சனை வந்து சேவை தாமதமானால், நீங்களும் 1500 ரூபாய் அபராதம் தருவீர்களா?” என்று கிண்டலாக கேட்டார்.
மற்றொருவர், “உணவகத்திற்கு வெளியே காத்திருக்க வைக்கப்பட்டால் உங்களுக்கு நாங்கள் அபராதம் விதிப்போம், சம்மதமா? என கேள்வி எழுப்பினார்.
“அத்துமீறல்கள் இருந்தாலும், நீங்கள் ரொம்ப ஓவராத்தான் போறீங்க. இரவு உணவிற்கு தங்கள் குடும்பத்துடன் இணைய முடியாத அவசர கால மருத்துவர் அல்லது குடும்ப அவசரம் உள்ள ஒருவரை கற்பனை செய்து பாருங்கள்,” என்று வேறொருவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த நடவடிக்கையை ஆதரித்தவர்களும் பலர் இருந்தனர். “இது முற்றிலும் இயல்பானது என்று நான் நினைக்கிறேன். மக்கள் போதுமான முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும், இது நல்ல நடத்தை இல்லாதது. அதற்காகத்தானே முன்பதிவுகள் இருக்கின்றன. உங்களுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள், நீங்கள் 8 பேர் என்று கணக்கிடுகிறீர்கள், இருவர் முன்னறிவிப்பு இல்லாமல் வரவில்லை என்றால், நீங்கள் அதற்கேற்ப ஷாப்பிங் செய்து சமைத்திருக்கிறீர்கள்,” என்று ஒரு நபர் எழுதினார்.
வராதவர்களுக்காக சமைத்த உணவை பார்சல் செய்து கொடுத்துவிட்டு அதற்கும் சேர்த்து காசு வாங்கி கொள்ளலாம், அபராதம் எல்லாம் ரொம்ப ஓவர்’ என்று இன்னொருவர் கூறினார்,.
வின்சென்ட்டின் கூற்றுப்படி, இந்த பிரச்சனை கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் நிகழ்கிறது. வெறும் 20 இருக்கைகளுடன் இயங்கும் ஒரு சிறிய உணவகத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க இடையூறை ஏற்படுத்துகிறது. கூகிளில் 4.7 நட்சத்திர மதிப்பீட்டை கொண்டுள்ள L’îlot, திறந்த சமையலறையுடன் கூடிய நிதானமான சூழலில் வழங்கப்படும் அதன் “புதுமையான மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு” பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.