என்னை நம்பி கெட்டவங்க யாரும் இல்லை.. ‘ஆபரேஷன் சிந்தூர்’ அடுத்து ‘ஆபரேஷன் சிந்து’.. இலங்கை, நேபாளத்திற்கு இந்தியா வாக்குறுதி..!

  ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்ற நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் விடுத்த கோரிக்கையை இந்தியத்…

india

 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்ற நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் விடுத்த கோரிக்கையை இந்தியத் தூதரகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்திய குடிமக்களை வெளியேற்றும் ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தின்கீழ், இந்த இரு நாடுகளின் குடிமக்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவசர காலத் தொடர்பு எண்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் தெஹ்ரானில் உள்ள இராணுவ மற்றும் அணுசக்தி மையங்களை தாக்கியதை தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் சிக்கி தவித்த தனது நாட்டினரை வெளியேற்ற இந்தியா ‘ஆபரேஷன் சிந்து’ என்ற சிறப்பு பணியை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்கள், பெரும்பாலும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள், ஒரு சிறப்பு விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் ஈரானில் மோசமடைந்து வந்த பாதுகாப்பு சூழலில் சிக்கித் தவித்த இந்த மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இது மிகப்பெரிய நிம்மதியை அளித்தது.

இந்திய அதிகாரிகளின் திறமையான செயல்பாடு காரணமாக இந்த போர்ச் சூழலிலும் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக ஜூன் 19, வியாழக்கிழமை அன்று, ஈரானின் உர்மியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 110 இந்திய மாணவர்களின் முதல் குழு டெல்லிக்கு வந்து சேர்ந்தது. இந்த மாணவர்கள் தரைவழி மார்க்கமாக ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து யெரெவான் நகரிலிருந்து விமானம் மூலம் புது டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்தச் சூழலை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அவரது மாநிலத்தை சேர்ந்த மேலும் பல மாணவர்கள் தரைவழி மார்க்கமாக ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டு பின்னர் விமானம் மூலம் அழைத்து வரப்படுவதாகவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அதிகாரிகளின் முயற்சியால் தற்போது இந்தியாவுக்கு மட்டும் வான்வெளியை ஈரான் அரசு திறந்துவிட்டது. இதனால் தற்போது ஈரானில் இருந்து நேரடியாக இந்திய மாணவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இலங்கை, நேபாளம் போன்ற நாடுகள் தங்கள் நாட்டினரும் ஈரானில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததால், இந்தியா அந்நாடுகளிடம் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. எனவே ஈரானில் சிக்கியுள்ள இலங்கை, நேபாளம் நாட்டை சேர்ந்தவர்களையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறது.