தண்ணி காட்டுறதுக்கே பொறந்தவன் நான்… இனிமேல் தண்ணீர் தருவோம்ன்னு நினைச்சு கூட பார்க்காதீங்க.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..!

  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஒருபோதும் மீண்டும் நடைமுறைக்கு வராது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தின் விதிகளை அப்பட்டமாக…

amitshah

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஒருபோதும் மீண்டும் நடைமுறைக்கு வராது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறிவிட்டதாகவும், இதுநாள் வரை நியாயமற்ற முறையில் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த நீர் இனி முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் காட்டமாக பேசியுள்ளார்.

முன்னணி பத்திரிகைக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அமித்ஷா இது குறித்து விளக்கினார். “சிந்து நதிநீர் ஒப்பந்தம் இனி ஒருபோதும் புதுப்பிக்கப்படாது. சர்வதேச ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால், அதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முழு உரிமை எங்களுக்கு இருக்கிறது, அதையே நாங்கள் செய்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தின் முன்னுரையே, இது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால், அந்த அமைதியும் முன்னேற்றமும் மீறப்பட்டுவிட்ட நிலையில், பாதுகாக்க இனி எதுவும் இல்லை,” என்று அமித்ஷா ஆணித்தரமாகக் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் உச்சக்கட்ட மோசமடைந்தன. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டினரை வெளியேற்றுவது போன்ற பல இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாகவே, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

“இந்தியாவுக்கு சொந்தமான நீரை நாங்கள் முழுமையாக பயன்படுத்துவோம். பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த நீரை, ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் இனி ராஜஸ்தானுக்கு கொண்டு வருவோம். நியாயமற்ற முறையில் கிடைத்து வந்த நீர் கிடைக்காமல் இனி பாகிஸ்தான் தவிக்கும்,” என்றும் அமித்ஷா எச்சரித்தார்.

“காஷ்மீரில் நிலவும் அமைதியை குலைக்கவும், அதிகரித்து வரும் சுற்றுலாவை தடுக்கவும், காஷ்மீர் இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்பவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி முயற்சி” என்று பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்த அமித்ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கு இதற்கு முன்பு ஒருபோதும் இந்தியாவுடன் இவ்வளவு ஒற்றுமையை காட்டியதில்லை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

“பாகிஸ்தான் என்ன செய்ய தேர்ந்தெடுத்தாலும், அதற்கு எதிராக எந்த தாமதமும் இன்றி நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,” என்று அமித்ஷா உறுதிபடக் கூறினார். மேலும், சுற்றுலா பயணிகள் மீண்டும் காஷ்மீருக்கு வர தொடங்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் இந்தியாவின் பொதுமக்கள் இடங்களை தாக்கியதாகவும், ஆனால் இந்தியா தக்க பதிலடி கொடுத்து அவர்களின் விமான தளங்களை சேதப்படுத்தியதால் தான், பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை நாடியது என்றும் அமித்ஷா தெரிவித்தார். “பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகளை தண்டிப்போம் என்ற பிரதமரின் பொது அறிவிப்புக்கு இணங்க, பயங்கரவாத துவக்க மையங்கள் மீது நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தினோம். அது ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்பதை மிக தெளிவாக தெரிவித்தோம். ஆனால் பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீதான எங்கள் தாக்குதலை தங்கள் நாட்டின் மீதான தாக்குதல் என பொய்யாக பறைசாற்றி வருகிறது’ என்றும் அமித்ஷா கூறினார்.