கோவாவில் உள்ள பிரதாப் நகர் வனப்பகுதியில் ஒரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது காதலன் என கூறப்படும் 22 வயது இளைஞரை கோவா காவல்துறை கைது செய்துள்ளது. திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் பெங்களூருவிலிருந்து கோவா வந்த இந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த சஞ்சய் கெவின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த 22 வயது பெண், ரோஷினி மோசே இவரும் அதே பகுதியை சேர்ந்தவர்.
குற்றத்தை செய்த பிறகு சஞ்சய் தப்பி சென்ற நிலையில், கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த காதலர்கள் சமீபத்தில் தான் கோவாவுக்கு வந்துள்ளனர். “திருமணம் செய்துகொள்ள பெங்களூருவிலிருந்து கோவா வந்தார்கள். ஆனால் திடீரென இருவருக்கும் இடையே ஒரு முக்கிய பிரச்சனையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சய், ரோஷினியை கொன்று சடலத்தை வனப்பகுதியில் வீசிவிட்டு தப்பித்துள்ளார்’ என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை, தென் கோவாவின் பிரதாப் நகர் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இந்த கொலை வெளிச்சத்திற்கு வந்தது. அவரது தொண்டையில் கத்தி காயம் உள்ளது என காவல்துறை உறுதிப்படுத்தியது.
சடலம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியது. பாதிக்கப்பட்டவரின் கைப்பை அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு பேருந்து டிக்கெட் முதல் துப்பை அளித்தது. கோவா காவல் கண்காணிப்பாளர் டீகாம் சிங் வர்மாவின் கூற்றுப்படி, அந்த டிக்கெட்டில் அப்பெண் கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து பேருந்தில் ஏறியது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் கிடைத்த புகைப்படம் மற்றும் விவரங்களுடன் காவல்துறை தேடுதல் அறிவிப்பை வெளியிட்டது. இது பாதிக்கப்பட்டவர் ரோஷினி என அடையாளம் காண உதவியது.
விசாரணையில், ரோஷினி, சஞ்சய்யுடன் ஐந்து வருடங்களாக காதலில் இருந்தது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை, இருவரும் பேருந்தில் கோவாவுக்கு பயணம் செய்துள்ளனர். பயணத்தின்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அதை தொடர்ந்து கோவாவின் பிலியெம் – தர்ன்பண்டோரா என்ற இடத்தில் பேருந்திலிருந்து இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையின் கூற்றுப்படி, சஞ்சய் பின்னர் ரோஷினியை அருகிலுள்ள ஒரு வனப்பகுதிக்கு அழைத்து சென்று, அங்கு கத்தியால் அவரது தொண்டையை அறுத்து கொன்றுவிட்டுத் தப்பி சென்றுள்ளார்.
ரோஷினியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டதும், காவல்துறை சஞ்சய்யை தேடுவதில் தீவிர கவனம் செலுத்தியது. ஒரு தகவல் மூலம் ஹூப்ளியில் சஞ்சய் இருக்கும் இடம் தெரியவர, சடலம் கண்டெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு என்ன காரணம் என காவல்துறை அதிகாரிகள் சஞ்சயிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜா தேனிலவு கொலை குறித்த பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் கோவாவுக்கு காதலனுடன் சென்ற காதலி கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இனிமேல் திருமணம் ஆனவர்களும் சரி, காதலர்களாக இருந்தாலும் சரி, தேனிலவு கொண்டாட வெளியூர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. நிம்மதியாக வீட்டிலேயே அல்லது அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் தேனிலவு கொண்டாடிவிட்டு வாழ்க்கையை தொடங்குங்கள் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.